தட்சிணாமூர்த்தி அய்யாசாமி

Dakshinamurthy_A

தட்சிணாமூர்த்தி அய்யாசாமி (1938) தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர் என பல பரிமாணங்கள் கொண்டவர் முதிர்ந்த தமிழறிஞர்.  தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் வல்லவர். சங்க இலக்கிய மொழிபெயர்ப்பு முன்னோடிகளில் ஒருவர். 19  செவ்விலக்கியங்கள், 3 இடைக்கால இலக்கியங்கள் மற்றும் 9 தற்கால இலக்கியங்கள் என 31 தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். அகநானூற்றை முழுமையாக  ஆங்கிலப்படுத்திய முதல் அறிஞர். பாரதிதாசனின் பாடல்களை மொழிபெயர்ப்பின் மூலம் வெளியுலகுக்குக் கொண்டுசென்றவர். தமிழர் நாகரிகமும் பண்பாடும் எனும் புகழ்வாய்ந்த வரலாற்று நூலைப் படைத்தவர். தமிழக அரசின் பாரதிதாசன் விருதினையும்(2003), செம்மொழித் தமிழுக்கான இந்தியக் குடியரசுத்தலைவர் விருதாகிய தொல்காப்பியர் விருதினையும் (2015) பெற்றவர்.

அ. தட்சிணாமூர்த்தி, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நெடுவாக்கோட்டை எனும் ஊரில் மிக எளியதொரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவர் தன் குடும்பத்தின் முதல் பட்டதாரியும், தன் ஊரின் முதல் முதுகலைப்பட்டதாரியும் ஆவார்!

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், மகா வித்துவான், ச. தண்டபாணி தேசிகர் உள்ளிட்ட பெருமக்களிடம் தமிழ் பயின்று 1961-இல் இளங்கலைப்பட்டம் (சிறப்பு) பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் “ஐங்குறுநூற்றில் முல்லைத்திணை” என்னும் பொருள் பற்றி ஆய்ந்து 1978 இல் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், “சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள்” என்னும் பொருள் பற்றி ஆய்ந்து 1988 இல் முனைவர் பட்டமும் பெற்றார்.

பேராசிரியர்  தட்சிணாமூர்த்தி தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் வல்லமைகொண்ட அரிய தமிழறிஞர்களில் ஒருவர். 1973 ஆம்  ஆண்டு, தனது 35வது வயதில் தமிழர் நாகரிகமும் பண்பாடும் எனும் வரலாற்று நூலின் மூலம் தமிழுலகில் ஆய்வறிஞராக அறிமுகமானவர் பின்னர், தமிழிலக்கியங்களின் பெருமையை உலகறியச் செய்யும் நோக்கத்தில், 1987 முதல் மொழிபெயர்ப்புப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடத்திக்கொண்டார். இதுவரை தன் தொடர் முயற்சியினால் 31 தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

சங்க இலக்கியங்களின் ஆராய்ச்சியிலும், சங்க இலக்கிய மொழிபெயர்ப்புத் துறையிலும் ஆழங்கால் பதித்த பேராசிரியர் கடந்த 2012 – ஆம் ஆண்டுக்குள், உலக அளவில் முதல் முறையாக, தனி ஒருவராக 19 செவ்வியல் இலங்கியங்களை முழுமையாகச் சிறப்புற ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

அவற்றுள் பத்துப்பாட்டில் அடங்கிய பத்து நூல்களும் (Ancient Tamil Classic Pattupattu In English – The Ten Tamil Idylls, Thamizh Academy, SRM University, Kattankulattur, 2012), எட்டுத்தொகையுள் அடங்கிய அகநானூறு(Akananuru – The Akam Four Hundred, 3 Volumes, Bharathidasan University, Thiruchirapalli, 1999) , நற்றிணை(The Narrinai Four Hundred, International Institute of Tamil Studies, Chennai, 2001), குறுந்தொகை (Kuruntokai – An Anthology of Classical Tamil Poetry, Vetrichelvi Publishers, Thanjavur, 2007) ஆகிய மூன்று நூல்களும், பதினெண்கீழ்க்கணக்குத் தொகுப்பில் அடங்கிய கார்நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை ஆகிய ஆறு அகநூல்களும் (Patinenkilkkanakku – Works on Akam theme (Includes Six Books, Bharathidasan University, Thiruchirapalli, 2010) அடங்கும்.

அகநானூற்றை  முதன் முதலாக முழுமையாக ஆங்கிலப்படுத்தியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கூறிய ஆறு பதினெண்கீழ்க்கணக்கு  அகநூல்களின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தந்த பெருமையும் இவருக்கு உண்டு. நற்றிணையின் மூலத்துக்கு நெருக்கமான முதல் மொழிபெயர்ப்பும், 19 ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய இரண்டாவது முழு மொழிபெயர்ப்பும்  இவருடையதே.

இவரது குறுந்தொகையின் ஆங்கில  மொழிபெயர்ப்பு, முதல் மொழிபெயர்ப்பு வெளியாகி 31 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் தோன்றிய இரண்டாவது முழு மொழிபெயர்ப்பாகும். இந்நூல் 2012 ஆம் ஆண்டுக்கான நல்லி-திசை எட்டும் மொழியாக விருதினை பெற்றது.

இவரது பத்துப்பாட்டு மொழிபெயர்ப்பு முதல் முழு மொழிபெயர்ப்பு வெளியாகி 66 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் தோன்றிய இரண்டாவது முழு மொழிபெயர்ப்பாகும். மூலத்துக்கு நெருக்கமான மொழிபெயர்ப்பு என்று போற்றப்படும் இந்நூல் 2017 ஆண்டில் இவருக்கு தமிழ்ப் பேராயத்தின் ‘ஜி. யு. போப் மொழிபெயர்ப்பு விருதினைப் பெற்றுத் தந்தது.

மூலத்திற்கு ஊறு செய்யாமல் பிழையின்றி, இனிய, எளிய ஆங்கிலத்தில் சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் தந்துள்ளமை இவரது தனிச் சிறப்பு என்பது அறிஞர்கள் கருத்து. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மொழிபெயர்ப்பு வெளியீடுகளில் இவருடைய மொழிபெயர்ப்புக்கள் கணிசமான அளவில் இடம்பெற்றுள்ளன. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பத்துப்பாட்டு மொழிபெயர்ப்புத் தொகுதிக்குப் பதிப்பாசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

தொடர்ந்து இலக்கியப் பணிகளை ஆற்றிவரும் இவர் புறநானூறு, பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, திருக்குறள், நாலடியார், திரிகடுகம், நான்மணிக்கடிகை, முத்தொள்ளாயிரம், இன்னாநாற்பது, இனியவை நாற்பது, களவழி நாற்பது, நீதி சாத்திரம், வாக்குண்டாம் நல்வழி, திருப்பாவை, திருவெம்பாவை உள்ளிட்ட பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்துப் பதிப்புக்கு ஆயத்த நிலையில் வைத்துள்ளார். அவை பதிப்பாளர்களுக்காகக் காத்திருகின்றன.

இவர் எழுதிய தமிழர் நாகரிகமும் பண்பாடும் (முதல் பதிப்பு, வெற்றிச்செல்வி பதிப்பகம், 1973, பன்னிரண்டாம் பதிப்பு, ஐந்திணைப்பதிப்பகம், 2017) என்னும் வரலாற்று நூல் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் பாடநூலாகவும், பார்வை நூலாகவும் விளங்கி அரசுப்பணிகளுக்கான தேர்வு எழுதுபவர்களுக்கும், இந்திய ஆட்சிப்பணி (IAS), இந்தியக் காவல்துறைப்பணி (IPS) ஆகியவற்றுக்குரிய தேர்வு எழுதுபவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பயன்பட்டு வருகிறது.

இந்நூல் தமிழரின் நாகரிகம் மற்றும் பண்பாடு தொடர்பான பல்வேறு கூறுகள் சங்ககாலம் தொட்டு காலப்போக்கில் வளர்ந்த வரலாற்றைத் தொடர்ச்சியாக விளக்குகிறது. சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள்(மங்கையர்க்கரசி பதிப்பகம் 2001, மறுபதிப்பு: NCBH பதிப்பகம், 2016) என்னும் ஆய்வு நூல் சங்ககாலச் சமுதாயத்தில் நிலவிய பல்வேறு உறவு நிலைகளை நடைமுறை சார்ந்தும் குறிக்கோள் நிலையிலும் விரிவாக விளக்குகிறது.  

தமிழியற் சிந்தனைகள் என்னும் நூல் தமிழ் இலக்கியமும் இலக்கணமும் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளின் அரிய தொகுப்பு. இவை  இவரெழுதிய குறிப்பிடத் தகுந்த வரலாற்று மற்றும் ஆராய்ச்சி நூல்களாகும்.

இவர் சங்க இலக்கியங்களான ஐங்குறுநூறு மற்றும் பரிபாடலின் ஒரு பகுதிக்கு பழைய உரையைத் தழுவி எளிய புதிய உரையும் வகுத்துள்ளார் (NCBH பதிப்பகம், 2004).

தமிழ் மொழி, இலக்கியம், இலக்கணம், வரலாறு, மொழிபெயர்ப்பு ஆகியவை தொடர்பான ஏறத்தாழ நூறு ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படைத்துள்ளார். அவற்றுள் ஐங்குறுநூறு தொகைநூலா?, ஐங்குறுநூற்றின் காலம், சங்க இலக்கியத்தில் திணைக்கலப்பு மணம், சொல்லிசை அளபெடை, மக்களும் மாக்களும், ஆனும் நீனும், நும்மின் வரலாறு, ஒரேழுத்து ஒரு மொழிகளும் புணர்ச்சி விதிகளும், ஆயர் சொல்லாராய்ச்சி, சங்க இலக்கியத்தில் கல்வெட்டுச் சொற்கள், முத்தரையர் யாவர்?, இலக்கியச் சிந்தனைகள், பட்டினப்பாலை, புறத்திணை இலக்கியம், நாலடியார் பதிப்பு வரலாறு முதலானவை சிறப்பான முடிவுகளைத்  தெரிவித்த கட்டுரைகளில் சில.

செவ்வியல் இலக்கியங்கள் அல்லாது இடைக்கால இலக்கியங்களாகிய பெருமாள் திருமொழி, நீதி வெண்பா, அபிராமி அந்தாதி ஆகியவற்றையும், தற்கால இலக்கியங்களான தற்கால இலக்கியங்களான பாரதிதாசனின் – சஞ்சீவி பர்வதத்தின் சாரல், புரட்சிக்கவி, கடல்மேல் குமிழிகள், தமிழச்சியின் கத்தி, காதலா கடமையா, இருண்ட வீடு, நல்ல தீர்ப்பு ஆகிய ஏழு படைப்புகளையும், பாரதியாரின் பாரதி அறுபத்தாறையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

மேற்கூறிய 7 பாரதிதாசன் நூல்களையும் ஆங்கிலப்படுத்திய முதல் அறிஞரும் இவரே! சாகித்ய அகாதமியின் விருதுபெற்ற நூலாகிய அ.ச.ஞானசம்பந்தனின் ‘கம்பன் புதிய பார்வை எனும் நூலையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். அதனை சாகித்திய அகாதமி Kamban – A New Perspective எனும் தலைப்பில் 2013-இல் வெளியிட்டது.

திருவாரூர் வடபாதி மங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல்நிலைத் தமிழாசிரியராகத் தம் பணியைத் தொடங்கி, மன்னம்பந்தல் அன்பநாதபுரம் வகையறா அறத்துறைக்கல்லூரியில் பயிற்றுநராகப் பணியாற்றிப் பின்னர், பூண்டி அ. வீரையா வாண்டையார் நினைவு திரு. புட்பம் கல்லூரியில் இருபத்துநான்கு ஆண்டுகள் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றி, இறுதியாக மதுரைத்தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்த செந்தமிழ்க் கலைக்கல்லூரியின் முதல்வராகப் பணி ஓய்வுபெற்றார்.

அங்கே பணிசெய்யும் காலத்தில், பல காலமாக நிதியின்மையால் பொலிவிழந்து செயல்குன்றியிருந்த மதுரைத்தமிழ்ச்சங்கத்தையும் கல்லூரியையும் புதுப்பிக்கும் முயற்சியில் தமிழ்ச்சங்க நிருவாகத்துக்குப் பெரிதும் துணைநின்று பல வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்டார். மதுரை தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தமிழக அரசிடம் நிதிவேண்டி உரிய திட்டங்களை வகுத்தளித்தார். தமிழ் ஆர்வலர்களைக் கொண்டு அறக்கட்டளைகளை நிறுவி, அதன் மூலம் வரும் வருமானத்தில் அறிஞர்களை அழைத்துவந்து மாணவர்கள் பயன்பெறும்படி சொற்பொழிவுகள் நிகழ்த்த வழிசெய்தார்.  புதிய வகுப்பறை, கட்டிடங்கள் எழுப்ப நிதி திரட்டினார். செந்தமிழ் கலைக்கல்லூரியை, ஆய்வியல் நிறைஞர் (M. Phil) மற்றும் முனைவர் பட்ட (Ph.D.) ஆய்வுகள் செய்யும் தமிழ் உயராய்வு மையமாக மாற்றினார். மாணாக்கர் தமிழக நாட்டுப்புறக் கலைகளில் பயிற்சிபெற தமிழ் வளர்ச்சித் துறையின் உதவியோடு வகுப்புகள் தொடங்கினார்.

பணி ஓய்வுக்குப் பின் தற்போது தஞ்சையில் வசித்துவருகிறார். இன்றும் அழைக்கும் பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் தமிழமைப்புகளிலும் இலக்கியச் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் பாடங்கள் எடுத்தும் வருகிறார்; மொழிபெயர்ப்புப் பயிற்சிப்பட்டறைகளை நடத்தியும் பங்களித்தும் வருகிறார். தொடர்ந்து செவ்விலக்கிய மொழிபெயர்ப்புப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார்.

இந்திய அரசின் செம்மொழித்தமிழுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதாகிய தொல்காப்பியர் விருது (2015), தமிழக அரசின் பாரதிதாசன் விருது (2003) மற்றும் பாரதிதாசன் நூலாசிரியர் சான்றிதழ் விருது(1991, “Poems of Bharathidasana – A Translation”), இராமநாதபுரம் தமிழ்ச் சங்கம்: வள்ளல் பாண்டித்துரைத் தேவர் விருது (2003), இந்தியப்பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்: சிறந்த தமிழறிஞர் விருது (2003), நல்லி-திசை எட்டும் மொழியாக்க விருது (2012, “Kuruntokai – An Anthology of Tamil Poetry”), தமிழிசைச் சங்கம்: திரு. வி. க. விருது (2012), கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது (2013), கல்கத்தா தமிழ்ச்சங்கம்: சாதனைத் தமிழர் விருது (2014), தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்: இலக்கிய ஆளுமை விருது(2015), கரந்தைத் தமிழ்ச்சங்கம்: ந. மு. வேங்கடசாமி நாட்டார் விருது (2016), எஸ். ஆர். எம். தமிழ்ப்பேராயம்: ஜி. யு. போப். மொழிபெயர்ப்பு விருது (2017, “Pattuppattu In English – The Ten Tamil Idylls”) மற்றும் பல அமைப்புகளின் சிறப்பான விருதுகளை இவர் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பேராசிரியரின் பங்களிப்புகள், படைப்புகள் பற்றி மேற்கொண்டு அறிய இத்தளத்தின் பிற பக்கங்களைக் காண்க. தொடர்புக்கு:

a.dakshinamurthy@gmail.com

Advertisements

One thought on “தட்சிணாமூர்த்தி அய்யாசாமி

  1. இந்த பதிவை இன்றுதான் பார்த்தேன்.
    மட்டற்ற மகிழ்ச்சி.
    வாழ்க வளமுடன்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s