தீபாவளியும் கார்த்திகையும் – ஒரு வரலாற்றுப் பார்வை

புதிய பனுவல்: An International Journal of Tamil Studies,

Vol I, Issue 4, November 2009,Pages 41 – 48, அ. தட்சிணாமூர்த்தி

உண்ணும் உணவோடும், அவ்வுணவை உற்பத்தி செய்ய உதவும் மாடுகளோடும் உறவுடைய பொங்கல் இந்நாளில் எவ்வளவு ஆர்வத்தோடு கொண்டாடப்படுகிறது என்பதை விளக்கத் தேவையில்லை. கதிரவன் திசைமாறும் நாளையே பொங்கல் என நாம் கொண்டாடுகிறோம். வடபுலத்தில் சங்கராந்தி என்று கொண்டாடுகிறார்கள். இன்று அது தமிழர் திருநாள் என்ற பெயரோடு தமிழகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இத்தகு திருநாள் பற்றிப் பழைய தமிழ் இலக்கியங்களில் ஒரு குறிப்பும் இல்லை. இன்று புத்தாடைகளோடும், புதுப்புது இனிப்புப் பண்டங்களோடும், வெடிகளோடும், வாண வேடிக்கைகளோடும் தொடர்புடையதாகவும், கோடிக்கணக்கான பணம் புரளுதற்குரிய வணிகத்தை ஊக்குவிப்பதாகவும் கொண்டாடப்படும் தீபாவளியைப்பற்றித் தமிழ்நாட்டில் காணக்கிடைக்கும் முதல் கல்வெட்டு, கி.பி. 1542 இல், அச்சுத தேவராயர் ஆட்சிக் காலத்தில் திருமலையில் பொறிக்கப்பட்டதே என அறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியம் தெரிவிக்கிறார். தீபாவளியன்று பெருமாளுக்கு அதிரசம் நிவேதனமாக அளிக்க ஆணையிடுவதாக இக்கல்வெட்டு அமைந்தது. விசயநகர மன்னர் ஆட்சிக்கு முன்னர், தீபாவளி என்ற பெயரோடு எந்த விழாவும் தமிழ்நாட்டில் கொண்டாடப்படவில்லை. ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடிய அருட்ப்பாடல்களிலும் அதுபற்றிக் குறிப்பில்லை. ஐப்பசியில் ஓண நாள் கொண்டாடப்பட்டதாக, தமிழாகரர் திருஞானசம்பந்தர் தம் திருமயிலைப்பதிகத்தில் குறித்தார். கார்த்திகையில் விளக்கீட்டு விழா நடந்ததையும் குறித்தார். ஆனால் தீபாவளி என்ற பெயரில் ஒரு விழாவையும் குறிக்கவில்லை. ஓணம் என்பது, திருமாலின் பிறந்தநாள். இது ஆவணியில் கொண்டாடும் விழா என்பர். இதனை மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.திருப்பதியில் கிடைக்கும் கல்வெட்டுச் செய்தியைக் கொண்டு, 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தீபாவளி இங்குச் சிறப்பெய்திய நிலையை உணரமுடிகிறது. தீபாவளியை, வடநாட்டவர்க்குரிய பண்டிகையாகவே நாம் கருதி வருகிறோம். சீர்திருத்தக் கொள்கையுடையோர் தீபாவளியைக் கொண்டாடுவதில்லை. நரகாசுரன் திராவிட இனத்தவன் என்பது அவர்கள் கருத்து.

2008 ஆம் ஆண்டு தீபாவளிக்கு முதல் நாள் வெளிவந்த தினமணியில், ‘தமிழ்மணி’ என்ற பகுதியில், ‘அகநானூற்றில் தீபாவளி’ என்று கட்டுரை வெளிவந்தது. அதன் ஆசிரியர் தெ. முருகசாமி என்ற தமிழறிஞர். அகநானூற்றில் 141 ஆம் செய்யுளில் கார்த்திகை விழாவைப்பற்றிய அரிய விளக்கம் அமைந்துள்ளது. அதனைத்தான் அவர் தீபாவளி என்று குறித்தார். தீபம் + ஆவளி தீபாவளியாயிற்று. விளக்கு வரிசை என்பது இதன் பொருள்.கார்த்திகை என்ற பெயர் கூட இல்லாத அகநானூற்றுக் குறிப்பில், மகளிர் முழு நிலவு நாளில் அறுமீன்கள் சேரும் நள்ளிரவில் விளக்குகளைத் தெருவெல்லாம் ஏற்றி, மாலைகளைத் தொங்கவிட்டு விழா நடத்தியதாகக் காணப்படுகிறது. எனவே இது தீபாவளிதானே! இதே நூலில் 17, 185 ஆகிய செய்யுட்களிலும் இவ்விழாவைப்பற்றிய செய்திகள் உள்ளன. நற்றிணையின் 202 ஆம் பாடல், கார்த்திகையை அறம் செய் திங்கள் என்கிறது. இந்த விழாவோடு எந்தத் தெய்வமும் தொடர்புப்படுத்தப்படவில்லை, தின்பண்டங்களோ, புத்தாடைகளோ சுட்டப்படவில்லை. பட்டாசு வெடித்தல் பற்றிய குறிப்பும் இல்லை. முழுக்க முழுக்க வானியல் தொடர்பான ஒரு நிகழ்ச்சியாகவே இது குறிக்கப்பட்டது. பொங்கலும் இத்தகையதே. கதிரவன் திசைமாறுவது தானே பொங்கல் விழாவிற்கு அடிப்படை! தமிழ்ச் செய்யுட்களில் அறுமீன் என்ற குறிப்பு வருவதனால்தான் இப்பண்டிகை கார்த்திகையில் கொண்டாடப்படுவது என்று முடிவுக்கு வருகின்றோம். மேக மூட்டம் இல்லாத, மழை பெய்து அடங்கிய கலப்பைகட்கு வேலையில்லாத பருவமே கார்த்திகை விழாக் கொண்டாடப்பட்ட காலம். ‘கார்த்திகைக்குப் பின் மழையில்லை’ என்பது பழமொழியல்லவா?

 

இத்தோடு , கார்த்திகை என்ற விண்மீன் (நாள்) பெயரையும், அப்பெயர் உடைய கார்த்திகை என்ற மாதப் பெயரையும்பற்றிச் சிறிது கூறுவோம். தமிழில் மிகத் தொன்மையான நூல் தொல்காப்பியம். தொல்காப்பியச் சான்றோர், எழுத்ததிகாரப் பகுதியில் நாள் பெயரும், மாதப் பெயரும் நிலைமொழியாக இருக்கையில், வருமொழியோடு புணர்கிற நிலையை விளக்குகிறார். இதனை அவர் இகர ஈற்றிலும், ஐகார ஈற்றிலும், மகர ஈற்றிலும் குறிக்கிறார். இன்று வழக்கிலுள்ள 12 மாதங்களின் பெயர்கள் இகரத்திலும் ஐகாரத்திலும் மட்டுமே முடிகின்றன. விண்மீன்கள் இருபத்தேழும் இகர, ஐகார, மகர ஈறுகளில் மட்டுமே முடிகின்றன. இதனால் அறிவதாவது, இன்று வழக்கிலுள்ள மாதப் பெயர்களும், விண்மீன் பெயர்களும் தொல்காப்பியர் காலம் முதல் உள்ளவையென்பதே. இப்பெயர்கள் முதலில் தோன்றிய நாடு எது என்பது ஆயத்தக்கதாகும்.

 

இனிச் சங்கச்செய்யுட்களில் இம்மாதப் பெயர்கள் இடம் பெறுகின்றனவா என்று கேள்வி எழுகிறது. பன்னிரு திங்கட் பெயர்களும் இடம் பெறவில்லை. தை, மாசி, பங்குனி, ஆடி, என்ற நான்கு மாதப் பெயர்களும் இடம் பெறுகின்றன. ‘தைஇத்திங்கள்’ (நற்.80) என்ற குறிப்பையும், ‘தையூண் இருக்கை’ (நற். 22) என்ற நோன்புப் பெயரையும் காண்க. மாசித் திங்கள்பற்றிப் பதிற்றுப்பத்தில் ஒரு குறிப்புண்டு. (பதிற். 59) அகநானூற்றின் 137 ஆம் செய்யுளில் உறையூரில் காவிரியின் நடுவே அமைந்த அரங்கத்தில் (இன்றையத் திருவரங்கம் தான்) பங்குனி முயக்கம் கொண்டாடப்பட்ட செய்தி இடம்பெறுகிறது. இதனை உத்திர நாள் விழாவெனவே உரையாசிரியர்கள் குறித்துள்ளனர். பங்குனி என்ற பெயர் புறநானுறு 229 ஆம் செய்யுளிலும் உண்டு.

 

இந்த நான்கு திங்களும் சுட்டப்படுவதனால், அன்று 12 திங்கட் பெயர்களும் வழக்கில் இருந்தன என்ற முடிவேற்படுகிறது. இதனால், கார்த்திகை என்ற நட்சத்திரப் பெயரும், திங்கட் பெயரும், இந்நாளிலும் இத்திங்களில் கொண்டாடப்பட்ட விழாவும் (விளக்கேற்றும் விழா) பழந்தமிழர்க்குச் சிறப்பாக உரியவை என்று முடிவேற்படுகிறது. புறநானூறு 229 ஆம் செய்யுள், கார்த்திகை மீனை, ‘அழல்’ என்று சுட்டுகிறது. சங்க இலக்கியத்தில், வேறு எந்த விழாவுக்கும் சான்றுகள் இல்லை. வெறியாட்டுக்கு அடுத்த சிறப்புப் பெறுவது கார்த்திகை மட்டுமே. இதன் பெயர் ‘விளக்கீடு’ என்பதைத் தமிழாகரர் திருஞானசம்பந்தர் தாம் முதன்முதல் சுட்டுகிறார். இதனால், தீபாவளி என்று வடமொழிப் பெயரும், விளக்கீடு என்ற தமிழ்ப்பெயரும் பொருளால் ஒன்றுபடுவதனைக் காணலாம்.

 

இனி, இப்பண்டிகைகள் கொண்டாடப்படும் திங்களைப்பற்றி எண்ணுவோம். ஐப்பசி மாதம் அமாவாசையை ஒட்டித் தீபாவளியும், கார்த்திகை மாதம் முழுநிலவை ஒட்டிக் கார்த்திகையும் கொண்டாடப்படுகின்றன. இதனை ஒரு வேற்றுமை என்று கணக்கிடக்கூடும். ஆனால், வடபுலத்தில், தீபாவளி கொண்டாடும் மாதத்தைக் கார்த்திகம் என்றே குறிக்கின்றனர். அஃதாவது, அவர்கட்கு அது கார்த்திகை மாதம் ஆகும். எனவே ஒருவகையில் மாதத்தாலும் இரண்டு விழாக்களும் ஒன்றே எனக் கருத இடமேற்படுகிறது. இந்த ஒற்றுமையினை அறிஞர் அயோத்திதாசப் பண்டிதரே முதலில் காட்டினார் என்று பாரதி வசந்தன் தம் தினமணி தீபாவளிமலர்க் கட்டுரையில் சுட்டிக் காட்டியுள்ளார். வராகமிகிரரின் கணக்குப்படி, தமிழ்மாதம் பிறப்பதற்குப் பதினைந்து அல்லது இருபது நாட்களுக்கு முன்பே சந்திரமான அடிப்படையிலான மாதம் பிறந்துவிடுகிறதாம். இதனால் கார்த்திகம் என்ற பெயரும், கார்த்திகை என்ற பெயரும் ஒன்றுபடக் காண்போம். அயோத்திதாசரும், பாரதிவசந்தனும் சொல்வதிலுள்ள பொருத்தத்தினை, விசயநகர வேந்தர் காலத்தில் இத்தாலி நாட்டிலிருந்து விசயநகரம் வந்த நிக்கலோ டி கோண்டி என்பவரும் டோமிங்கோ பேயசு என்ற இன்னொரு ஆசிரியரும் தரும் தீபாவளி பற்றிய விளக்கத்தாலும் உறுதி செய்யலாம். இதற்கு உறுதுணையாக, பதினென்கீழ்க்கணக்கு நூற்களுள் ஒன்றான கார்நாற்பதில் உள்ள ஒரு சான்றும் அமையக் காணலாம்.

 

நிக்கலோ டி கோண்டி என்பவர் தீபாவளிப் பண்டிகை நாளை வருடப்பிறப்பு நாள் என்று குறித்தார். டோமிங்கோவும் இதனை ஏற்றார். இவ்வறிஞர், இவ்விழா அக்டோபர் 12இல் நடந்ததாகக் குறிக்கிறார். நரகாசுரன் வரலாற்றோடு தொடர்புப்படுத்தியதையும் இவர் சுட்டுகிறார். ஆண்களும், பெண்களும், வயது வேறுபாடின்றி, ஆறு, குளம், கடல் ஆகியவற்றில் நீராடி, புத்தாடை புனைந்து தொடர்ந்து மூன்று நாட்கள் ஆடியும் பாடியும் களித்தனர் என்கின்றனர். தீபாவளி நாள் அமாவாசையாகும் என்பதனையும் சுட்டிக்காட்டும் பேயசு என்ற அறிஞர், அமாவாசையில் தொடங்கும் ஆண்டு, அமாவாசையிலேயே முடிந்தது என்கிறார். தமிழ்நாட்டில் தீபாவளி அமாவாசையை ஒட்டி ஐப்பசியில் கொண்டாடப்படுகிறது. ஆனால் வடநாட்டவர் கருத்துபடி, கார்த்திகையில் கொண்டாடப்படுகிறது. வடநாட்டவரின் விளக்கீட்டு விழாவும் மூன்று நாள் கொண்டாடப்பட்டது என்பதனைக் கருதவேண்டும். தமிழ் நூல்களுள் கார்த்திகை என்ற பெயரை முதன்முதலாகப் பதினென்கீழ்க்கணக்கு நூல்களான கார்நாற்பதிலும் களவழி நாற்பதிலும் காண்கிறோம். இவற்றில், கார்நாற்பதில் வரும் குறிப்பு மிகச் சிறப்பானது. தீபாவளியும் கார்த்திகையும் ஒன்றே என்று உறுதிசெய்யப் பெரிதும் உதவுவது. இந்த நூலின் ஆசிரியர், காடுகளில், ‘தோன்றி மலர்கள்’ பேரளவில் பூத்துக் குலுங்குவதனை வருணிக்கையில், பின்வருமாறு கூறுகின்றனர். ‘நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கின் தகையுடையவாகிப் புலமெல்லாம் பூத்தன தோன்றி (26). தலைநாளாவது முதல்நாள் அல்லது தொடக்க நாளாகும். கார்த்திகை விழாவின் முதல்நாளில் ஏற்றிவைக்கப்பட்ட விளக்கு என்பதனால், மேலும் சில நாட்கள் அது கொண்டாடப்பட்டது என்பது வெளிப்படையாகும். அது எத்துணை நாள் கொண்டாடப்பட்டது என்று அது வெளிப்படக்கூறாவிட்டாலும், இன்றுள்ள நடைமுறையைப் பார்க்கையில், மூன்றுநாட்கள் கொண்டாடப்பட்டது என்பது விளங்குகிறது. இன்று, மூன்றாம் நாள் கார்த்திகை, ‘குப்பைக் கார்த்திகை’ எனப்படுகிறது. உழவுக்குப் பயன்படும் குப்பை மேடுகளில் விளக்கு ஏற்றுவது வழக்கமாகும். முதல்நாளில் மிகுதியான விளக்குகளை ஏற்றினர். அதனால்தான், தோன்றிமலர் மிகுதிக்கு அது உவமையாயிற்று. களவழிநாற்பது இதனை, ‘கழிவிளக்கு’ என்கிறது. 17. கழி என்னும் உரிச்சொல் மிகுதிப் பொருள் தருவதாகும். அடுத்தடுத்த நாளில் ஒரு சில விளக்குகள் மட்டும் ஏற்றப்பட்டன என்பது குறிப்பு. தீபாவளி ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்படுகிறது. ஆனால் விளக்கீடு இதில் இடம்பெறவில்லை. இது தமிழ் நாட்டில் உள்ள நிலை.

 

நிக்கலோ டீ கோண்டி தீபாவளியினை மூன்று நாள் விழாவாகக் கூறுவதனை, நம் கார்த்திகைக் கொண்டாட்டத்தோடு ஒப்பிடும்போது இரண்டு விழாவும் ஒன்றே என்ற முடிவுக்கு வருதலைத் தவிர்க்க முடியாது. தமிழ்மரபில், கார்த்திகை சைவத்தோடு (சிவனோடும் முருகனோடும்) தொடர்புடையது. வடபுலத்தில் கார்த்திகை விழா (தீபாவளி) வைணவத்தோடு தொடர்புடையது. தமிழ்நாட்டுக் கார்த்திகையில் எண்ணெய் முழுக்கு, புத்தாடை, இனிப்பு முதலியன இல்லை. வடவர் மரபில் இவை தவிர்க்க முடியாதவை. பாரதி வசந்தன் அவர்கள் கூறுவது போல், இவ்விழாவின் ஆணிவேரை அறிஞர்கள் ஆய்ந்து கண்டறிய வேண்டும். முடிவு, பெரும்பாலும் இது தமிழர்களின் முன்னோர்களிடமிருந்து, உருவான பண்டிகை என்பதாக இருக்க முடியும்.

 

இனி, மகாராட்டிரத்தில் மகாபலி வாமன அவதாரத்தால் அடக்கப்பட்ட அல்லது முத்தியளிக்கப்பட்ட நாளாகக் கருதி மகாபலியின் உருவங்களை மகளிர் வழிபடுவதாகவும் அதுதான் தீபாவளி என்றும் அறிகிறோம். விஷ்ணுவின் இடத்தில் காளியை வைத்து வழிபடுவதாகவும் கூறுகின்றார். இராமபிரான், இராவணனை அழித்து, சீதாப்பிராட்டியை மீட்டு, அயோத்திக்குத் திரும்பி வந்து முடிசூட்டிக் கொண்ட நாளே தீபாவளி நாள் என்ற கருத்தும் உண்டு.

 

இங்கு, இன்னொரு நல்ல கருத்தையும் எண்ணிப் பார்க்கலாம். வர்த்தமான மகாவீரர், தம்முடைய பாவாபுரி அரண்மனையில் இரவு முழுவதும் தம் மாணாக்கர்க்கு அறநெறிகளை எடுத்துரைத்தார் என்றும், பொழுது விடிவதற்குச் சற்று முன்பாக, வைகறையில் அவர் முத்திப்பேறு அடைந்தார் என்றும், அது முதலாக, அவரைப் பின்பற்றியோர் அந்நாளை ஞானத்தின் அடையாளமான விளக்குகளை ஏற்றிக் கொண்டாடினர் என்றும், இன்றும், குஜராத்தைச் சார்ந்த மார்வாரிகள் இந்நாளில் தம் புதுக்கணக்கைத் தொடங்குவர் என்றும், அதுவே ஆண்டின் பிறப்பாகக் கொள்ளப்படுகிறது என்றும் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி, ‘சமணமும் தமிழும்’ என்ற நூலில் குறித்துள்ளார்கள். இக்கருத்து, முன்னர்ச்சுட்டிய நிகிலோ டீ கோண்டி, பேயசு ஆகியோரின் கருத்தைத் தழுவியதாகவே தோன்றுகிறது. அயோத்திதாசப் பண்டிதர் தீபாவளிக்கும் பௌத்தத்திற்கும் உள்ள உறவுக்கு ஒரு கதை சொல்லப்படுவதையும் விளக்கியுள்ளார்.

 

மலாடபுரம் என்ற ஊரிலிருந்த பௌத்தர்கள் ஆமணக்கு விதைகளில் இருந்து எடுத்த நெய்யின் மருத்துவக் குணத்தை அறிந்தும், அது விளக்கு எரிக்கப் பயன்படுவதனை உணர்ந்தும், அதன் பயன்பாட்டைத் தம் மன்னனிடம் சொல்ல,அம்மன்னன் ஆமணக்குச் செடிகளைப் பயிரிடுமாறு மக்களுக்கு அறிவுறுத்தினான் என்றும், அண்ணாந்து என்னும் மலை உச்சியில் குழிதோண்டி, பருத்திநூல் திரிவைத்து எரிய விட்டு, அது உயிர்களுக்குத் தீங்கு செய்யாது என்பதனை ஆராய்ந்து அறிந்து, மக்களைக் கூட்டி, ஆமணக்கு நெய்யை விளக்கெரிக்கப் பயன்படுத்துமாறு கட்டளை இட்டான் என்றும் அம்மக்கள் அதன் தீமை இன்மையை உறுதிசெய்ய விரும்பி, மூன்று நாட்கள் வீட்டுக்கு வெளியில் திண்ணையிலும் தெரு மாடத்திலும் விளக்குவைத்து, பின்னர் வீட்டினுள்ளும் விளக்ககேற்றினர் என்றும் கூறியுள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக, இது ‘கார்த்துல தீபம்’ என்று அழைக்கப்பட்டதையும், கார்த்திகை மாதத்து முழுநிலவு நாளிலே தீபமேற்றி, ஈகை அளித்துப் பகவத்தியானம் செய்தனர் என்றும் குறிப்பிடுகிறார். முழுநிலவோடு தொடர்புடையதாகச் சொல்லுவது, தமிழர் மரபை ஒட்டியுள்ளதைக் காண்க. இந்த வழக்கத்தையும், நற்றிணை 202 ஆம் செய்யுளில் வரும் ‘அறம் செய் திங்கள்’ என்ற தொடரையும் ஒப்பிட்டுக் காணலாம். அறச் செயல்களைத் தான் பௌத்தர்கள் ஈகை என்கின்றனர்.

 

இவை அனைத்தையும் எண்ணிப் பார்க்கையில், கார்த்திகை என்ற விளக்கீட்டு விழாவை, சைவர், வைணவர், சமணர், பௌத்தர் என்கிற அனைவரும் தமக்கே உரிய வகையில் கொண்டாடி வருவதனை அறியலாம். இவ்வகையில் இது தேசிய விழாவாகும். இருள் தீமைக்கு அறிகுறி; ஒளி நன்மைக்கு அறிகுறி. உலகில் தீமைகள் அடியோடு நீங்கி எல்லோரும் இன்புற்றிருக்க நன்மைகள் பெருகவேண்டும் என்பதனையே இவ்விழா குறிக்கிறது என்று அறியவேண்டும். இப்பொழுது, அகநானூற்றின் 141 ஆம் செய்யுளில் நக்கீரர் சொல்வதனை இந்தக் கருத்தோடு இணைத்துப் பார்க்கலாம்.

 

‘மதிநிறைந்து அறுமீன் சேரும் அகல் இருள்நடுநாள் மறுகு விளக்குறுத்து மாலை நாற்றிப் பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவு.’

பலருடன் துவன்றி’ என்ற குறிப்பில், ஊர்மக்கள் அனைவரும் கூடி நடத்திய விழா இதுவென்பது விளங்கும். இன்றும் தமிழகத்துச் சிற்றூர்களில் ஊர்ப்பொது விழாவாகவே இது கொண்டாடப்படுகிறது. ஊரின் நடுவிடத்தில் ‘சொக்கக்பனை’ கொளுத்தப்படுகிறது. இதனைச் ‘சுவர்க்கப்பனை’ என்று விளக்கலாம். பனைமடல்களை ஒரு தேர்போலக்கட்டி அமைத்து, நல்ல நேரத்தில் அதற்குத் தீ மூட்டி வழிபடுவர். எஞ்சியுள்ள அம்மடல்களின் பகுதிகளை இல்லத்தில் வைத்துக் காப்பர். திருவண்ணாமலை தீபம் புகழ்மிக்கது. இறைவனை ஒளிவடிவமாக வணங்குதலை இது குறிக்கலாம். மறம் தொலைந்து அறம் வளர்தலையும், துன்பம் நீங்கி இன்பம் பிறத்தலையும், அறியாமை நீங்கி, அறிவு தலைக் காட்டுதலையும் இருளின் நீக்கமாகவும் ஒளியின் தோற்றமாகவும் அடையாளம் காட்டி இந்நாட்டு மக்கள் விழாவெடுத்தனர் என்று அறிகிறோம். பேரறிஞர் அயோத்திதாசப் பண்டிதர் சொல்லும் கதையில் வரும் அண்ணாந்து மலை என்ற பெயர் திருவண்ணாமலையை நினைப்பிக்கிறது. மலை உச்சியில் தீபமேற்றியதாக அவர் குறிப்பிடுவதும் இதனை உறுதிபடுத்துகிறது. எனவே, பௌத்த சமயத்தவரின் பழமரபுக் கதை கார்த்திகை விளக்கீட்டு விழா, தமிழகத்தோடு தொடர்புடையதே என்பதை உறுதிபடுத்த மிகவும் துணைபுரிகின்றது.

 

பன்னெடுங்காலமாகத் தமிழர் கொண்டாடி வந்த விளக்கீட்டு விழாவோடு, கி.பி. 15 ஆம் நூற்றாண்டளவில் தமிழ்நாட்டில் புகுந்த வடநாட்டு விளக்கீட்டு விழாவையும் சேர்த்துக் கொண்டாடும் நிலை தோன்றியுள்ளது. இரண்டும் வெவ்வேறு விழாக்களாகத் தோன்றினாலும், இரண்டும் ஒன்றே என்ற விளக்கம் நமக்குக் கிடைக்கிறது. இச்சிந்தனையைத் தூண்டிய அறிஞர் அயோத்திதாசரையும், நல்ல நேரத்தில் இதனை நினைவூட்டிய பாரதி வசந்தனையும் பாராட்ட வேண்டும்.

கி. பி. 15 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு இறக்குமதியான ஒரு புதிய பண்டிகை போலத் தோற்றமளிக்கும் தீபாவளி உண்மையில் பழந்தமிழ் மக்கள் கொண்டாடிய விளக்கீட்டிலிருந்து தோன்றியிருக்கலாம் என்ற கருத்து எளிதில் புறக்கணிக்கத் தக்கது அன்று.

 

குறிப்புகள்:

1. ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதிமயா பும்பாவாய்
– திருமயிலைத் திருப்பதிகம்

2. கார்த்திகைநாள்
தளந்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்
– நாடி பதிகம் – 3

3. கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய ஓண நன்னாள்
– மதுரைக்காஞ்சி 590 – 591

4. இப்பாட்டில், தலைமைகளின் தந்தைக்குரிய காட்டைத் தலைமகன்,
– நுந்தை

அறுமீன் பயந்த அறம்செய் திங்கள்
செல்சுடர் நெடுங்கொடி போலப்
பல்பூங் கோங்கம் அணிந்த காடு’

என்று பாராட்டுகின்றான். காட்டில் எல்லையற்று மலர்ந்துள்ள கோங்கம் பூக்களை கார்த்திகை நாளில் ஏற்றப்பட்டு ஒளி உமிழும் விளக்கு வரிசைக்கு உவமை கூறுவது காணக்தக்கது.

5. தொல்காப்பியம், எழுத்ததிகாரம், உயிர் மயங்கியல் 45, 46.

6. தொல்காப்பியம், எழுத்ததிகாரம், உயிர் மயங்கியல் 84.

7. தொல்காப்பியம், எழுத்ததிகாரம், புள்ளிமயங்கியல் 36.

8. Mahalingam, T.V, Administration and social life under vijayanager part II, University of Madras, Chennai, 1975, p. 78.

9. மு.கு.நூ. ப. 241.

10.அயோத்திதாசர் சிந்தனைகள் மிமி, அலாய்சியஸ், ஞான. (தொகு.) நாட்டர்வழக்காற்றியல் ஆய்வு மையம், தூயசவேரியர் கல்லூரி(தன்னாட்சி), பாளையங்கோட்டை, ப. 47

PDF வடிவில் படிக்க இங்கே சொடுக்கவும் :http://www.indianfolklore.org/journals/index.php/Panu/article/view/719/899

Advertisements

2 thoughts on “தீபாவளியும் கார்த்திகையும் – ஒரு வரலாற்றுப் பார்வை

  1. i had a book sanskritization by DK published in tamil. There is they wrote we Tamilians follow both deepawali and Karthikai but it is one and same like that. Later I will give the details. My rmail id is Padmanabhan55@yahoo.com

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s