குண்டக்க மண்டக்க…

ஜூன் 16 , 2019
தமிழ்மணி, தினமணி நாளிதழ்

குண்டக்க மண்டக்க வண்டி ஓட்டுறாங்க – கோளாறாப் போயிட்டு வாங்க” – இது மதுரையில் குடியேறியபோது, மதுரை நண்பர் சொன்ன எச்சரிக்கை உரை. இது எனக்குப் புரியாத புதிராகவே இருந்தது. இது மதுரைக்கே உரிய வட்டார மொழி. ‘சட்ட விதிகள் பற்றிக் கவலைப்படாமல், முரட்டுத்தனமாக வாகனம் ஓட்டுபவர்கள் பலராக உள்ள நிலையில், பாதுகாப்புக்குரிய வகையில், துன்பம் ஏதும் இன்றிப் போய் வாருங்கள்’ என்று நண்பர் அறிவுறுத்தினார் என்று ஓரளவுக்குப் புரிந்து கொண்டேன்.

tm2

மதுரை தமிழ்வளம் செறிந்த பழம்பெருமையுடைய நகரமாதலின், இவ்வழக்கில் ஏதோ வரலாறு மறைந்திருக்க வேண்டும் என்ற நோக்கில் சிந்தித்தபோது, தேவாரமும், திவ்யப் பிரபந்தமும் கைகொடுத்தது. சைவ நாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும் பல்லவர் காலத்தில் சமணரோடும், பௌத்தரோடும் கடுமையாகப் போராடும் பக்தி நெறியினை வளர்த்தனர்.

திருஞானசம்பந்தரின் பதிகங்களில், ஒரு பாட்டு சமண, பௌத்தர்களை இழித்தும் பழித்தும் சாடுதலையே நோக்கமாகக்கொண்டது. அப்பர் பாடல்களிலும் இத்தகு பழிப்புரைகள் உண்டு. ஆழ்வார்களுள் தொண்டரடிப்பொடியாழ்வாரின் ஒருபாடல் மட்டுமே அக்காலத்து சமயமுரண்பாட்டுப்போரை நமக்குக் கோடிட்டுக் காட்டும்.

ஆழ்வாரின், “வெறுப்பொடு சமணமுண்டர், விதியில் சாக்கியர் நின்பால்” என்ற பாட்டிலுள்ள “முண்டர்” என்ற சொல்லை நினைவில் வையுங்கள். அப்பர் பெருமான், தாம் சமண நெறி சார்ந்ததற்குக் கழிவிரக்கப்படுதலை பல சான்றுகளால் அறியலாம். அவற்றுள் ஒன்று, “குண்டனாய்ச் சமணரோடே கூடி நான் கொண்ட மாலை” (தேவா.384) என்பது. குண்டன் என்பது முரடன், மூர்க்கன் எனப் பொருள்படும் வசைமொழி.

குண்டனாய்த் தலைபறித்திட்டுக் குவிமுலையார்
நகை காணாது உழிதர்வேனை” (தேவா 45)

என்பதில் திகம்பர சமணனாகத் தாம் திரிந்தது பற்றிய குறிப்புள்ளது. சாதாரண குண்டனாய் மட்டுமல்லாது, குண்டர்களுக்குத் தலைவனாகவும் தாம் விளங்கியதை எண்ணி நாணமுற்றார். “சமணர்க்கோர் குண்டாக்கனாய்” (தேவா. 963) என்ற குறிப்பைக் காணலாம். குண்டாக்கன் என்பதற்குத் தமிழ்ப்பேரகராதி தரும் பொருள், “குண்டர்க்குத் தலைவன்” என்பது. இன்னும் குண்டர் சட்டம் நம்மி டையே உண்டே மூர்க்கர்கள் (ரெளடிஸ்) என்று இதனை விளக்குகின்றனர்.

‘முண்டன்’ என்ற சொல்லை ஆற்றல்மிக்கவன் என்ற பொருளில் நாம் ஆள்கிறோம். இது மிண்டன் என்பதன் திரிபு. விறன்மிண்ட நாயனாரை நாம் அறிவோம். இந்த முண்டன் என்ற சொல்லுக்கு, ஆடையற்றவன் (திகம்பரன்) என்ற பொருளும் உண்டு. முண்டமாகத்திரிகிறான் என்பதும், ஒருவனை முண்டம் என்று இகழ்வதும், சமணர்களைத் தேவார திவ்யப்பிரபந்த ஆசிரியர்கள் திட்டிய வரலாற்றையே தெரிவிக்கின்றன. குண்டன் குண்டாக்கன் ஆனவாறே மிண்டன், மிண்டாக்கனாக ஆகலாமல்லவா?

மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கிடுமினீரே” (திருமாலை) எனத் தொண்டரடிப்பொடி ஆழ்வார் கூறவில்லையா? முரட்டுத்தனமாக, அறிவீனத்தோடே பேசும் பேச்சு என்ற பொருளை, “பிண்டியர் கள் மிண்டு மொழி” (தேவா.49) என்று வரும் பகுதி கொண்டு உணரலாம். தமிழ்ப் பேரகராதி மிண்டுதல் என்ற சொல்லுக்கு வலியராதல், மதம் கொண்டவர் என்ற பொருள்களைத் தருகிறது.

இச்சான்றுகளால், பல்லவர் காலத்தில் நடந்தசமயப்புரட்சியில், சைவ, வைணவர்கள் தம் எதிரியரான சமணரையும், பௌத்தரையும் பழித்துப்பேசிய வரலாற்றின் எச்சங்களாகவே ‘குண்டக்க மண்டக்க‘ என்னும் வழக்காறு இருந்துள்ளது தெளிவாகிறது.

இனி, கோளாறு பற்றிப் பார்க்கலாம். வயிற்றுக்கோளாறு, மூளைக்கோளாறு என்பவை நமக்குப் பழக்கமானவை. தாறுமாறான நிலையை இது குறிக்கிறது. தாறுமாறு, குற்றம் என்ற பொருள்களைத் தலைமையானவையாகப் பேரகராதித் தருகின்றது. தேவாரத் தில் ‘கோள்‘ என்பது ‘தீமை‘ என்று பொருள்படும். இதற்கு ஞானசம்பந்தர் பாடிய கோளறு பதிகமே’ சான்று.

‘கோள் அற’ அதாவது, யாதொரு தீமையும் இல்லாத வகையில் போய் வருமாறு வற்புறுத்துவதே, ‘கோளாறாய்ப் போங்கள்” என்பது. பேச்சில் கோள்+அற என்பது கோளாறா என்று திரிந்து போயிற்று. சமண சமயத்தாரோடு அனல் வாதமும், புனல் வாதமும் புரிந்த ஞானசம்பந்தர் வரலாற்றோடு கோளாறு’ என்பது தொடர்புடையது என்பதை அறிய, நமக்கு இன்று வியப்பு ஏற்படுகின்றது!

மக்களின் பேச்சில் மறைந்து கிடக்கும் வரலாறுகள் மிகப் பலவாகும். நுட்பமாகச் சிந்தித்தால் நூற்றுக்கணக்கான வரலாறுகளை மக்கள் பேச்சிலிருந்து உணர வாய்ப்புண்டு.

-முனைவர் அ. தட்சிணாமூர்த்தி

Sun, 16 June 2019 https://epaper. dinamani.com/c/404661

Advertisements

மக்களும் மாக்களும்

 

பேராசிரியர் அ. தட்சிணாமூர்த்தி
‘தினமணி’ இதழில் 2009 ஆண்டு வெளியான ஆராய்சிக்கட்டுரை


“மாக்கள்” என்னும் சொல் பழந்தமிழில் பரவலாக வழங்கி இப்பொழுது வழக்கு வீழ்ந்துவிட்டது. மேற்போக்காகக் காண்கையில் இது “ஆ” என்பதற்குரிய பன்மை வடிவமான “ஆக்கள்” என்பது போன்று விலங்குகளைக் குறிக்கும் பொதுச் சொல்லான “மா” என்பதற்குரிய பன்மை வடிவம் போலத் தோன்றும். ஆனால் உண்மை அதுவன்று.

தொல்காப்பியத்தின் மூன்றாம் பகுதியாகிய பொருளதிகாரத்தின் மரபியலில் சில சூத்திரங்கள் உயிர்களை ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர் ஈறாக வகைப்படுத்திக் காட்டுதலை அறிஞர் பலரும் அறிவர். இச்சூத்திரங்களுள் ஐந்தறிவுடையன பற்றிய இளம்பூரணர் உரையில்,

“மாவும் புள்ளும் ஐயறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

என்றுள்ளது. ஆனால் பேராசிரியரின் உரையில்,

“மாவும் மாக்களும் ஐயறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

என அமைந்துள்ளது.

இவ்விருவர் பாடங்களுள் தொல்காப்பியரின் எண்ணப் போக்கிற்கு ஏற்புடையது யாதென்பது ஆராய்ச்சிக்குரியது.

உயிர்க்கூட்டத்தில் பறவையினத்திற்குரிய சிறப்பிடத்தை நன்குணர்ந்த தொல்காப்பியர், கருப்பொருள்களை வரிசைப்படுத்தும் பொழுது அதற்கு உரிய இடத்தினை அளிக்கத் தவறினாரல்லர்.

தெய்வம் உணாவே மா மரம் புள் பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அன்னவை பிறவும் கருவென மொழிப – 20 – அகத்திணையியல்

என்பது அவர் திருவாக்கு. மாவையும் விலங்கையும் வெவ்வேறாக ஓதிய ஆசிரியர், தொடர்ந்து,

“எந்நில மருங்கின் பூவும் புள்ளும்
அந்நில மருங்கின் வாரா வாயினும்
வந்த நிலத்தின் பயத்த வாகும்”

எனச் சிறப்பு விதியும் வகுத்தார்.

இங்ஙனம் பறவையினத்திற்கு உரிய இடம் வகுத்த ஆசிரியர், உயிர்களை அவற்றின் அறிவிற்கு ஏற்ப வகைப்படுத்தும் பொழுது அவற்றைப் புறக்கணித்திருக்க வாய்ப்பு இல்லை. மேலும் “மா” என்பதனுள் புள்ளை அடக்கிக் கூறினார் என்பதும் அவர் கருத்திற்கு இசைந்ததன்று. எனவே, இளம்பூரணர் கொண்ட பாடமே சரியானது என்று முடிவு செய்தல் தவறாகாது.

மக்கள் என்பார் விலங்குகளினும் மேலானோர் என்பதும், அங்ஙனம் மேன்மையுறுதற்கு அடிப்படையாக அமைவது அவர்க்கு ஐந்தறிவிற்கும் மேலான மனவுணர்வு அமைந்திருத்தலே என்பதுமே தொல்காப்பியர் கருத்து. ஒன்றிரண்டு உறுப்புகள் குறைவாகவுடையோரை எப்பெயரால் அமைப்பது என்பது பற்றி ஆசிரியர் கருதினாரல்லர். அப்படிக் கருதியிருப்பின், சொல்லதிகாரத்தில்,

“உயர்திணையென்மனார் மக்கட்சுட்டே அஃறிணையென்மனார் அவரல பிறவே”

என்று விளக்கிய இடத்திலேயே மாக்கள் பற்றியும் விளக்கியிருப்பார்.

ஆண் தன்மை மிகுந்த பெண்ணையும்
பெண் தன்மை மிகுந்த ஆணையும்
எவ்வாறு வழங்குதல் வேண்டும் என விளக்கிக் கூறிய இலக்கண ஆசிரியர்கள், “மாக்கள்” என்பார் விலங்கொடு சேர்ந்து எண்ணத்தக்கார் என விதி வகுக்காமை நோக்கத்தக்கது. பகுத்தறிவு இல்லாரை விலங்கொடு சேர்த்து எண்ணவேண்டும் என்ற கருத்து, பேராசிரியர் காலத்தில் நிலவியதன் விளைவாகவே இப்பாட வேறுபாடு தோன்றியது என்று கருதலாம்! இவ்விடைக்காலக்கருத்தை தொல்காப்பியர் மீது திணித்தலை ஏற்க இயலாது.

நச்சினார்க்கினியர் பேரறிவாளர்.

தொல்காப்பியத்திற்கும் சங்க இலங்கியங்களுள், பத்துப்பாட்டு, கலித்தொகை ஆகியவற்றுக்கும் சீவகசிந்தாமணிக்கும் உரை வகுத்த பெருமைக்குரியவர்.

அவருடைய உரைகளை நோக்கும் பொழுது அவர், “மாக்கள்” என்ற சொல்லுக்கு “மனவுணர்ச்சியில்லாதோர்” என்ற பேராசிரியரின் கருத்தினை முழுமையாக ஏற்றுக் கொண்டவர் என்பது புலப்படுகின்றது.

அவர் உரையின் சில பகுதிகள் வருமாறு:-

“தவம் செய் மாக்கள் தம்முடம்பு இடாது அதன் பயம் எய்திய அளவை மான” – மிக்க தவத்தைச் செய்கின்ற மாக்கள் தம்முடைய தவம் செய்த உடம்பைப் போகடாதேயிருந்து அத்தவத்தாற் பெறும் பயனைப் பெற்ற தன்மையை ஒப்ப மக்களென்னாது மாக்களென்றார் வீடுபேறு குறியாது செல்வத்தைக் குறித்தலின்.

பொருநராற்றுப்படை (91-92).

“பொழுதளந் தறியும் பொய்யா மாக்கள்” உரை:- அறிவில்லா தோருடைய வாழ்நாளை இத்துணையென்று அளந்தறியும் பொய்யாத காட்சியை உடையார். (மாக்கள் பொழுதளந்து அறியும் பொய்யாக் காண்கையர் எனச் சொற்களை இடம் மாற்றித் தம் விருப்பத்திற்கு இணங்கப் பொருள் தந்துள்ளார்). முல்லைப்பாட்டு (55).

“மாக்கள்” என்ற சொல் ஐந்தறிவுடையார்க்கே உரியது என்பதே நச்சினார்க்கினியரின் உறுதியான கோட்பாடகத் தெரிகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், முழுவலிமாக்கள், இரியல் மாக்கள், மதனழி மாக்கள் ஆகிய தொடர்களுக்கு விளக்கமளிக்கையில் முறையே நிரம்பிய மெய்வலியை உடைய மாக்கள் கெடுதலை உடைய மாக்கள் வலியழிந்த மாக்கள்
என்றே எழுதிச் செல்கின்றார்.

(நெடுநல். 32; பெரும். 432; மலைபடு 280).

மனிதர் அல்லது மாந்தர் என்று விளக்க இடமிருந்தும் அதனைத் தவிர்த்து “மாக்கள்” என்ற சொல்லையே உரையிலும் பயன்படுத்துகின்றார் மருதன் இளநாகனார்.

இடைக்காலத்து உரையாசிர்களாம் பேராசிரியர், நச்சினார்க்கினியர் ஆகியோரின் கருத்தினை, இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும்பேராசிரியர் சிலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர்களுள் முதன்மையானவர் டாக்டர் உ.வே.சாமிநாதய்யராவார்.

பத்துப்பாட்டை, நச்சினார்க்கினியர் உரையுடன் வெளியிட்டு உதவிய ஐயரவர்கள் ஓர் அடிக்குறிப்பில் குறிப்பிட்டது வருமாறு:-

“ஐயறிவு – ஐம்பொறியுணர்வு; மாக்கள்
மனனுணர்வின்றி ஐம்பொறியுணர்வையே
உடைய விலங்கு போல்வார்;

இதனை,

“மாவும் மாக்களும் ஐயறிவினவே”

“மக்கள் தாமே ஆறறிவுயிரே”

என்னும் தொல்காப்பிய மரபியற் சூத்திரங்களானும் உணர்க! (பட்டினப்பாலை 217ம் அடிக்குரிய உரை)

இதனால், பேராசிரியரின் பாடத்தையே ஐயர் அவர்கள் ஏற்றுக்கொண்டமை புலப்படுகின்றது. அங்ஙனமே, “மாக்கள்” என்ற சொல்லுக்குப் பேராசிரியர் கொண்ட பொருளையே தாமும் மேற்கொண்டமையும் தெரிகின்றது.

ஐயரவர்கள் தாமே உரை வகுத்துவெளியிட்ட குறுந்தொகையில் பல செய்யுட்களில் மாக்கள் என்னும் சொல் இடம்பெறுகின்றது (6, 89,145,146,203,263,265,309). இவற்றுள், 6,89,145 ஆகிய செய்யுட்களின் உரையில் ஐயரவர்கள் பழைய உரையாசிரியர்களையொட்டிய விளக்கத்தையே கூறியுள்ளார்.

இந்நூலின் 145ம் செய்யுளில் வரும், “துயில்கண் மாக்களொடு” என்ற பகுதிக்கு, “துயிலுதல் பொருந்திய கண்களையுடைய அறிவற்ற மக்களோடு” என்று உரை வகுத்து, “மாக்களென்றது இங்கே தோழியை; தன் ஆற்றாமை அறியும் வன்மையில்லாமை பற்றி இங்ஙனம் கூறினாள்”,என்று விளக்கமும் அளித்துள்ளார்.

ஐயரவர்கள், குறிப்பிட்ட சில இடங்களில் இப்படிச் சிறப்பு விளக்கங்கள் கொடுத்தாலும், ஏனைய இடங்களில் மாக்கள் என்பதற்கு “மனிதர்” என்றே பொருள் எழுதினார். மக்கள் என்றோ மனிதர் என்றோ எழுத மனமின்றி, மாக்கள் என்றே எழுதிய நச்சினார்க்கினியரிமிடருந்து இவ்வகையில் ஐயரவர்கள் வேறுபடுகிறார்.

இதனால் அறிவதாவது,

மாக்கள் என்ற சொல் பொதுவாக மக்கள் என்ற பொருளிலேயே சான்றோரால் ஆளப்பட்டுள்ளது.

இது மக்கள் என்பதன் நீட்டல் விகாரமாகக் கொள்ளத்தக்கது.

பல நிலைகளையும் சார்ந்த மக்கள் குழுவினர் இச்சொல்லால் குறிக்கப்பட்டனர்.

தொல்காப்பியர் “மாக்கள்” என்ற சொல்லைப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. இடைக்காலத்தில் ஒரு கருத்துக் குழுவினர் “மாக்களும்” என்ற சொல்லை, “புள்ளும்” என்ற சொல்லின் இடத்தில் புகுத்தினர் என்று கொள்ளலாம்.

சங்க நூல்களில் “மக்கள்” என்ற பொருளில் “மாக்கள்” என்ற வடிவம் 48 முறைகளும், மக்களைக் கொண்டது என்ற பொருளில் “மாக்கட்கு” என்ற வடிவம் இரு முறைகளும், மக்களை என்னும் விளிப்பொருள்பட “மாக்காள்” என்ற வடிவம் ஒரு முறையும் இடம் பெறுதலைக் காண்கிறோம்.

இக்கட்டுரையில் வற்புறுத்தப்பட்டவற்றை அறிஞர் உலகம் ஆய்ந்து ஏற்குமாக.

– அ.தட்சிணாமூர்த்தி

 

பண்பாட்டுத்தூதன் சாதுவன்

 

முனைவர் அ. தட்சிணாமூர்த்தி
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் குடமுழுக்கு விழா மலர் , 1973
தமிழியற் சிந்தனைகள், அகல் பதிப்பகம், சென்னை, 2003, (பக். 122 – 127)


கோவலன் காவிரிப்பூம்பட்டினத்துப் பெருங்குடிவனிகன். சாதுவனும் அந்நகரத்துப் பெருங்குடிவணிகனே. கோவலன் தந்தை மாசாத்துவன். சாதுவன் என்ற பெயருக்கும் மாசாத்துவன் என்ற பெயருக்கும் இடையே மிகுதியான ஒற்றுமை காணப்படுவதும் காண்க.

இவ்விரு வாணிகரும் மழைவளம் தரும் பத்தினிப்பெண்டிரை மனைவியராகப் பெற்ற பெருமைக்குரியோர். இருவரும் தத்தம் மனைவியைப் பிரிந்து பரத்தைமை மேற்கொண்டோராகவே படைக்கப்பட்டுள்ளனர்.

கோவலன் வடுநீங்கு சிறப்பின் மனையகம் மறந்து விடுதலறியா விருப்புடன் மாதவியோடு வாழ்ந்தான் எனில், சாதுவனும் தகவிலனாகி, அணியிழையாம் ஆதிரையை அகன்று போய், கணிகையொருத்தி கைத்தூண் நல்க அவளோடு வாழ்ந்தான்.

கோவலன் தன் செல்வம் முழுவதையும் இழந்து வறுமையுற்றான். தான் தன் குலம்தரு வான்பொருளை இழந்தமைமையத் தன் மனைவியிடம் சொல்லிக் கழிவிரக்கப்படும் பொழுது,

சலம்புணர் கொள்கைச்சலதியோ டாடிக்
குலந்தரு வான்பொருள் குன்றம் தொலைத்த
இலம்பாடு நாணுத்தரும்

என்றான். சாதுவனும் வட்டினும் சூதினும் வான்பொருள் வழங்கி வறுமையுற்றதாகச் சாத்தனார் கூறுகின்றார்.

இருவருமே தத்தம் கணிகையரிடமிருந்து விலகுகின்றனர். ஆனால் அதில்வேறுபாடுண்டு. கோவலன், வினைவிளை கால மாதலின், ஐயுறக்கூடாத அழகு நங்கையிடமிருந்து தானே விலகுகின்றான். மாதவி,தன் காதலன் தன்னைப் பிரிந்தமைக்குரிய காரணம் அறியாது கையற்றுப் புலம்புகின்றாள். ஆனால் சாதுவனோ தன் கணிகையால் விலக்கப்படுகிறான். ‘பேணிய கணிகையும் பிறர்நலம் காட்டிக் காணம் இலியெனக் கையுதிர்கோடலும் என்றார் சாத்தனார். மாதவி கோவலனைக் காதலித்தவள். ஆனால் சாதுவன் தொடர்புகொண்டகணிகையோ, அவன் பொருளையே காதலித்தாள். ஆம்! அவள் பொருளையே பொருட்படுத்திய பொருட் பெண்டாவாள். கணிகையர் குலத்துப் பண்பு அனைத்தும் கொண்டவளாக இவள் படைக்கப்பட, மாதவியோ கணிகையர் குலத்துப் பிறந்தாலும் கற்புக்கடம்பூண்ட பொற்புடை பெண்ணரசியாகப் படைக்கப் பட்டவள்.

கோவலன் தான் இழந்த செல்வத்தை மீண்டும் ஈட்டவேண்டும் என்று விரும்புகின்றான். சாதுவனும் அவ்வாறே விழைகின்றான். ஆனால், கோவலன் மாதவியை விட்டு நீங்கிவுடனேயே தன் மனைவியை நோக்கி’ஓடுகின்றான். தன் பிழைகளை வெளிப்படக் கூறிவருந்துகின்றான். இழந்த வான்பொருளை ஈட்ட விரும்புவதாகக் கூறுகின்றான். அவளும் சிலம்புள கொண்ம்’ என மூலதனம் வழங்குகின்றாள்.

சாதுவனோ, மனைவியிடம் செல்லவிரும்பவில்லை. தன்பொருளை ஈட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றான். பொருளையீட்டியன்றி மனைவியைக் காண்டல் தனக்கு இழிவு என்று அவன் கருதியிருக்கவேண்டும்.

இருவரும் வேற்றுார் செல்லுகின்றனர். கோவலன் காலிற் சென்றான் எனில் சாதுவன் கலத்திற் சென்றான். கோவலனுக்கு வழித்துணை மனைவியும் மாதவத்தாட்டியான கவுந்தி அடிகளும் ஆவர். சாதுவனுக்கோ பொருளீட்டும்  வேட்கை உடைய வணிகர்கள் வழித்துணை ஆயினர்.

கோவலன் மேற்கொண்ட பயணம் இடையூறு யாதுமின்றி இனிதே நிறைவேறுகின்றது. கவுந்தியடிகளின் அருளால் மாதரி வீட்டில் தங்கியிருந்து அவன் பொருள் முயற்சியில் ஈடுபட வாய்ப்பு ஏற்படுகிறது கோவலனுக்கு. ஆனால் சாதுவன் நிலைவேறானது. நடுக்கடலில் கப்பல் கவிழ்கின்றது; அவன் அலைகடலில் வீழ்ந்து துயர்உறுகின்றான்; அவன் எண்ணியும் பார்க்காத ஒரிடத்தில்- நாகர் நாட்டில் கரையொதுங்கிக் கிடக்கும் அவலநிலையை எய்துகின்றான். கோவலன் தான் மதுரை செல்ல விரும்பி, அவ்வாறே மதுரையை அடைய, சாதுவன் தான் செல்ல விரும்பிய நாடு சேரவழியின்றிச் சேராத இடத்தைச் சேர்ந்தான்.

கோவலன் அடைந்த இடம் பழியொடுபடராப்பஞ்சவன் கோநகர்;தண்ணார் தமிழ் அளிக்கும் பாண்டிய நாட்டின் தலைநகர்; நாகரிக நன்னகர்! ஆனால் சாதுவன் சென்ற இடமோ ஆடையின்றித் திரியும் நாகர்தம் நாடு.

கோவலன் மனிதப் போர்வையில் இருந்த விலங்காம் பொற்கொல்லனைச் சந்தித்து வாழ்வை இழந்தான் என்றால் சாதுவன் விலங்குபோல் இருந்தவர்களிடம் இருந்த மனிதப் பண்பால் வாழ்வு பெற்றான்.

தமிழ் வளர்த்த நாட்டில், தமிழ் மன்னன் ஆட்சியில், கோவலன் தமிழர்களால் கொல்லப்பட்டான். பொற்சொல்லன், காவலர்கள் முன்னிலையில், கோவலன் கள்வன் எனக்குற்றம் சாட்டி நெடும்பேச்சுப் பேசினான். ஆனால், அவனை மறுத்து ஒரு சொல்லும் சொல்லாது, கோவலன் ஊமையாய் நின்றான். அவன் வாய்திறந்து பேசியிருந்தால் ஒரு வேளை உயிர் பிழைத்திருப்பான். தன்னைச் சூழ்ந்து நின்று சாரணர் பேசியதைக்கேட்ட சாதுவன், பேசாதிருந்திருப்பின் மாண்டிருப்பான். கோவலனை அவன் தமிழ் அறிவு காப்பாற்றவில்லை. சாதுவனை அவன் பெற்ற நாகர் மொழியறிவு காப்பாற்றிற்று. நாகரிகமற்ற நாகர்மொழியையும் சாதுவன் கற்ற வனாகப் படைக்கப்பட்டிருத்தல்  குறிப்பிடத்தக்கது.

பழியொடு படராப்பஞ்சவன், மன்னர்க்கு மன்னன் மதிக்குடை வாழ்வேந்தன் தென்னவன், பொற்கொல்லன் சொல்கேட்டுப் புரையற்ற கோவலனைக் காணாமலேயே குற்ற வாளியெனக் கொண்டு கொல்வித்துப் பழிகொண்டான். ஆனால், நாகரிக மற்றவனாகக் கருதப்படும் சாரணத்தலைவன் எண்குதன்பிணவோடு இருந்தது போலத்தன் மனைவியுடன் கள்ளடு குழிகியும் கழி முடை நாற்றமும், வெள்ளென்பு உணங்கலும் விரவிய இருக்கையில் இருந்து அயலவனான சாதுவனை விருந்தினனாக ஏற்றான்; ‘நம்பிக்கு இளையன்ஒர்நங்கையைக் கொடுத்து வெங்கள்ளும் ஊனும் வேண்டுவகொடும்,’ என்றுதன் பணியாளர்க்குக் கட்டளையிட்டான்.

கோவலன் தான்கொண்டு சென்ற செல்வத்தையும் இழந்து உயிரையும் இழந்தான். ஆனால் சாதுவனோ வெறுங்கையோடு சாரணர் உலகம் புகுந்தான். ஆனால் திரும்புகையில் பெருஞ் செல்வத்திற்கு உரியனாக உருமாறினான். ‘பண்டும் பண்டும் கலம் கவிழ்மாக்களை உண்டேம் அவர்தம் உறுபொருள் ஈங்கிவை என்று பெரும் செல்வக் குவியலை அவனுக்குப் பரிசாக அளித்தான் நாகர் தலைவன்!

கோவலன் அடியெடுத்து வைத்த கோநகர் மதுரை தீக்கு இரையாயிற்று மன்னன்தன் மனைவியுடள் மாண்டான்! ஆனால் சாதுவன் புகுந்த நாகர்நாடு புத்தஞாயிற்றின் ஒளிபெற்றுப்புதுவாழ்வு பெற்றது! பெண்டிரும் உண்டியுமே வாழ்வின் பயன் என்று வாழ்ந்த நாகர்கள், புலால் உண்டியின் புன்மையை அறிந்தனர்; மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும் சான்றோரால் கடியப்பட்டவை என்பதனை முதல் முறையாக அறிந்தனர். இறந்தவர் பிறத்தலும் பிறந்தவர் இறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றவை என்று அறிந்தனர். நல்லறம் செய்தவர் நல்லுலகும் அல்லறம் செய்தோர்.அரு நரகத்தையும் அடைவர் என்று உணர்ந்தனர்.

தன் கணவனைக்கள்வன் எனக்குற்றம் சுமத்திக்கொன்ற நகரத்தைத் தீக்கு இரையாக்க விரும்பிய கண்ணகி தீக்கடவுட்குக்கட்டளையிட்ட போது, அக்கடவுள் அவள் கட்டளையை உடனே நிறைவேற்றிற்று. காவலன் பேரூரில் கனையெரி மண்டிற்று ஆதிரை தீக்குளித்து உயிர்விட விரும்பினாள். சுடலைக் கானில் தீமூட்டப்பட்டது. ஆதிரை அதன்மீது அமர்ந்தாள். ஆனால் தீ அவளைச்சுட மறுத்தது. ‘தீயும் சொல்லாத் தீவினையாட்டியேன் யாது செய்வேன்?’ என வாய்விட்டுப் புலம்பினாள். ஆம்! கண்ணகியின் கட்டளை நிறை வேற்றப்பட்டது. ஆதிரையின் வேண்டுதல் புறக்கணிக்கப்பட்டது.

சிலப்பதிகாரத்தில் கண்ணகியும் கோவலனும் மீண்டும் ஒன்று சேர்கின்றனர். கோவலன் தெய்வ வடிவில் கண்ணகியைக் கூடுகின்றான். ஆனால் சாத்தனார் சாதுவனையும் ஆதிரையையும் மனித வடிவிலேயே மீண்டும் இணைய வைக்கின்றார்.

சாத்தனார் சிலப்பதிகாரக் கதை நிகழ்வுகளை உருமாற்றித் தம் காப்பியத்தின் ஒரு காதையாக அமைத்துத் தம் நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளார் என்று சொல்வது தவறாகாது. சிலப்பதிகாரத்தைச் சமணக் காப்பியம் என்று சொல்வார் உளர். ஆனால் இதனை மறுப்பாரும் உண்டு. இளங்கோவடிகட்குச் சமயப் பொறையிருந்தது. சமண சமயவுண்மைகள் கவுந்தியடிகள் சாரணர் ஆகியோர்வாயிலாகச்சொல்லப்பட்டுள்ளன. ஆய்ச்சியர் குரவையில் திருமால் வழிபாடு நன்கு விளக்கப்பட்டுள்ளது. வேட்டுவ வரியிலும் குன்றக் குரவையிலும் கொற்றவை வழிபாடும் முருக வழிபாடும் பேசப்படுகின்றன. குறிப்பிட்ட சமயத் தத்துவங்களைப் பரப்பும் நோக்கம் இளங்கோவடிகட்கு இருந்ததாகச் சொல்ல முடியாது. ஆனால், சாத்தனார் புத்த சமயத்தைப் பரப்பும் நோக்குடனேயே காப்பியம் இயற்றினார். ஆதிரை பிச்சையிட்ட காதையில் இந்நோக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளதன்மையைச்சுருக்கமாகக் கூறி இக்கட்டுரை நிறைவுறுகின்றது.

கொல்லாமையறமும் புலால் மறுத்தல் அறமும் சமணர்க்கும் பெளத்தர்க்கும் பொதுவானவை. ஆனால் புலால் உண்ணுவது பற்றிக் காலப்போக்கில் பெளத்தர்கள் சற்று நெகிழ்ச்சியான போக்கைக் கடைப்பிடித்தனர் என்று தெரிகின்றது. நாகர் குருமகன் வெங்கள்ளும் ஊனும் வேண்டிய அளவு கொடுக்குமாறு கட்டளையிட்ட பொழுது சாதுவன் வெவ்வுரை கேட்டேன் வேண்டேன்’ என்றான். ஆனால் நாகர்தலைவன் ‘கள்ளும் ஊனும் கைவிடின் இவ்வுடம்பு உள்ளுறை வாழுயிர் ஒம்புதல் ஆற்றேன், தமக்கொழி மரபின் சாவுறுகாறும் எனக்கா நல்லறம் எடுத்துரை என்று அவன் அடி வீழ்ந்து வேண்டியபோது சாதுவன்,

நன்று சொன்னாய் நன்னெறிப்படர்குவை
உன்றனக்கு ஒல்லும் நெறியறம் உரைக்கேன்
உடைகல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்குறின்
அடுதொழில் ஒழிந்து அவர் ஆருயிர் ஓம்பி
மூத்து விளி மாஒழித்து எவ்வுயிர் மாட்டும்
தீத்திறம் ஒழிக’

என்று அறிவுறுத்தினான். இதனால், முதுமையால் இறந்த விலங்கின் இறைச்சியை உண்ணத்தடையில்லை என்பது விளங்கும்.

புத்தபகவானுடைய மொழிக்கொள்கையும் சாதுவன் வரலாற்றால் வற்புறுத்தப்படுவதாகத் தோன்றுகின்றது. வடமொழியில் சமயத் தத்துவங்களை எழுதிவைக்கும் மரபு வேதநெறியாளர் பின்பற்றி யதாகும். புத்தபகவான் இதற்கு மாறாக, மக்கள் மொழியிலேயே கருத்துக்களைச் சொல்ல வேண்டும் என்று விரும்பினார். பாலிமொழியே பெளத்தர்களால் கையாளப்பட்டது என்பது எண்ணத்தக்கது. கிறித்துவ சமயத்தொண்டர்கள் தாம் சென்ற பகுதியின் மொழிகளைக் கற்றுச் சமயப்பணி புரிந்தமையோடு புத்தபகவான் கொள்கையை ஒப்பிட்டுக் காணலாம்.

நாகரிகமில்லாத சாரணர்களின் மொழியைக் கூட ஒருவன் கற்பது தேவையானது என்பது சாத்தானார் கோட்பாடாகத் தெரிகின்றது. வணிகமரபினர்க்கு இது அடிப்படையான தேவையன்றோ! நானா தேசியத்திசையாயிரத்து ஐந்நூற்றுவர் என்னும் வணிகர்குழுவொன்று இடைக்காலத்தில் இருந்தமை கல்வெட்டுக்களால் அறியப்படு கின்றது. இத்தகு வணிகக் குழுக்களால்தான், இந்தியப் பண்பாடு கீழ்த்திசை நாடுகளில் பரவிற்று என்பது வரலாற்றறிஞர்துணிபாகும். தமிழகத்திலிருந்தே மகாயான புத்த சமயம் வெளியுலகுக்குச் சென்றது என்பர். காஞ்சிபுரம் புத்த சமயத் தலைமையிடமாக இருந்தது என்பதனை நினைவுகூர்க. சாதுவன் வரலாறு, புத்த சமயம் வணிகர்களால் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட வரலாற்றைக் காட்டுவதாகக் கொள்ளலாம்.

வணிகர்கள் சமணசமயத்தையும் பெளத்த சமயத்தையும் பெரிதும் பின்பற்றினர் என்றும், அவர்கள் மேம்பாடு பெற்ற காலப் பகுதியிலேயே தமிழில் காப்பியங்கள் பெருகின என்னும் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர். இன்று தமிழிலுள்ள பெருங்காப்பியங்களும் சிறுகாப்பியங்களும் இவ்விரு சமயங்களையும் சார்ந்தவர்களாலேயே இயற்றப்பட்டன என்பது எண்ணத்தக்கது. சாதுவன் என்ற பாத்திரம் வணிகர்கள் பண்பாட்டுத்தூதர்களாய்ச் செயற்பட்டமையை நமக்கு நினைவூட்டு கிறது என்று கொள்வது தவறாகாது!

சங்க இலக்கியங்களும் திணைக் கலப்பு மணமும்

சங்க காலத்தில் இயற்றப்பட்ட அகத்திணைச் செய்யுட்கள் அக்காலத் தமிழ் மக்களின் ஆண் பெண் உறவு பற்றிய கோட்பாடுகளைத் தெளிவுறக் காட்டுகின்றன. முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து திணைகளிலும் அவ்வத் திணையின் இயற்கையை ஒட்டி ஐந்து வகையான வாழ்க்கை முறைகள் உருவாகியிருந்தன என்பதனைத் திணைச் செய்யுட்கள் உணர்த்துகின்றன. இவர்கள் தனித்தனிப் பண்பாடுகளைப் போற்றினாலும் தமக்குள் பொருளாதார உறவு கொண்டிருந்தனர் என்று அறியச் சான்றுகள் உள்ளன. இப்பொருளாதார உறவு பண்டமாற்றின் வழியே வளர்ந்ததாகும். இதற்குமேல், இப்பல்வகைப் பிரிவினரிடையே மணவுறவு நிலவிற்றா என்பது ஒரு வினாவாகும். சாதியமைப்பு இறுக்கமான காலங்களிலும் கலப்பு மணங்கள் நடந்தே உள்ளன. எனவே பண்டும் அத்தகு இலக்கியப் படைப்பாளர்கள் பண்டைக் காலத்தில் இப்புறனடை நிகழ்ச்சியை இலக்கியப் பொருளாகக் கொண்டதாகத் தெரியவில்லை. அற்றைச் சமூகத்தில் எத்தகைய மரபுகள் பின்பற்றப்பட்டனவோ அவற்றை மனத்திற்கொண்டு அக்கால இலக்கிய மரபுகளோடு இணைத்துச் செய்யுள் செய்தனர். ஒரு திணை மாந்தர் தமக்குள்ளேயே கொண்டும் கொடுத்தும் வாழ்ந்த நிலையினைக் கண்டனர்; ஒரு திணைக்குள்ளேயே வயது வந்த ஆணும் பெண்ணும் கண்டு காமமுற்று மணக்கும் நிலையினையே அகத்திணைக்குப் பொருளாக்கினர். எனினும், சங்கப் பாடல்களை ஆய்ந்த இக்காலச் சான்றோர் சிலர் அன்று திணைக்கலப்பு மணத்திற்கும் இடமிருந்தது என்று கருதுகின்றனர். இக்கருத்தின் வன்மை மென்மைகளை ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சங்க இலக்கியங்களும் திணை கலப்பு மணமும்

வெவ்வேறு நிலப்பகுதிகளின் வாழ்க்கைமுறைகளும் கணிசமான அளவில் வேறுபட்டிருந்தன. கருப்பொருள் பற்றிய தொல்காப்பியச் சூத்திரம் இதனைத் தெளிவாகவே உணர்த்துகின்றது. முல்லை, குறிஞ்சி முதலான திணைகளைத் தனித்தனி உலகமாகவே காட்டுவார் தொல்காப்பியர். இப்பண்பாட்டு வேறுபாடு நிலம் விட்டு நிலம் நடைபெறும் கலப்பு மணங்களை ஊக்கவில்லை என்றே தோன்றுகிறது. ஒரு திணையாரிடையே நடந்த காதல் மணமும்கூடப் பல்வேறு தடைகளை நீக்கி வெற்றிபெற வேண்டிய நிலைமை அன்றிருந்தது. ஊரலர், உடன்போக்கு, அன்னையின் சினம், தமர் தேடிச் செல்லல், மடலேற்றம் பற்றிய பேச்சு ஆகியவை காதலர்க்கு இருந்த இடையூறுகளையே காட்டுகின்றன.

திணைக்கலப்பு மணமும் சங்க இலக்கியத்தில் பாடப்பட்டுள்ளது என்பதற்கு அம்மூவனாரின் இரு செய்யுட்கள் சான்றாகக் கொள்ளப்படுகின்றன. (அகம். 140,390) இவை இரண்டும் தலைவன் கூற்றுகளாக அமைந்தனவாகும். இவற்றில் இடம்பெறும் தலைவி அன்று உப்பு வாணிகத்திலீடுபட்டிருந்த உமணர் என்னும் குடியாரின் மகளாவாள். உப்பை விலை கூறி விற்கும்பொழுது அவளைக் கண்டு காதலுற்ற காளையின் கூற்றாக இச்செய்யுட்கள் அமைகின்றன.

பேராசிரியர் முனைவர் வ.சுப. மாணிக்கனார் அவர்கள் இவ்விரு செய்யுட்களையும் திணைக்கலப்பு மணம் பற்றியனவாகக் கருதியுள்ளார்கள். அகம். 140ஆம் செய்யுள் குறிஞ்சித் திணை சார்ந்த தலைவனுக்கும் நெய்தற் குமரிக்கும் இடையே தோன்றிய காதலையும், அகம்.390 ஆம் செய்யுள் முல்லைத் தலைவனுக்கும் நெய்தற் குமரிக்கும் இடையே தோன்றிய காதலையும் விளக்கும் எனத் தம் தமிழ்க் காதலில் விளக்கியுள்ளார்கள்.+

இவ்விரு செய்யுட்களிலும் உமணர் பற்றிய செய்திகள் உள்ளன.
அவை வருமாறு:

பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
இருங்கழிச் செறுவின் உழாஅது செய்த —
வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி
என்றுழ் விடர குன்றம் போகும்
கதழ்கோல் உமணர் காதல் மடமகள் (அகம் 140.1-5)

உவர்விளை உப்பின் கொள்ளை சாற்றி
அதர்படு பூழிய சேட்புலம் படரும்
ததர்கோல் உமணர் (அகம், 3901-3)

உமணர் என்னும் இனத்தவர் கடற்கரையில் விளையும் உப்பினை உள்நாட்டில் நெடுந்தொலைவு எடுத்துச் சென்று விற்கும் இயல்பினர் என்பதே உமணர் பற்றி நாம் உணரும் செய்தியாகும்; உமணர் கடற்கரை வாழ்வினர் என்று இச்செய்யுட்கள் கூறவில்லை. நாடெல்லாம் சுற்றி வணிகம் செய்யும் இயல்பினர் உமணர் என்றும், அத்தகையோரின் மகள் தலைவியென்றுமே தலைவன் குறிப்பிடு கின்றான். என்றுாழ் விடர குன்றம் போகும் என்னும் பகுதியைக் கொண்டு தலைவன் தலைவியைச் சந்தித்த இடம் குறிஞ்சி நிலம் என்று முடிவு செய்து இச்செய்யுள் குறிஞ்சித் தலைவனுக்கும் நெய்தற் குமரிக்கும் நடக்கும் காதலைக் காட்டுகிறது என்று பேராசிரியர் மாணிக்கனார் அவர்கள் கூறியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், உமணர் என்பார் கடற்கரை உப்பை மலை நாடு வரைக்கும் எடுத்துச் சென்று விற்போர் என்பதே செய்யுளில் காணப்படும் செய்தியாகும். ‘கழியுப்பு முகந்து கன்னாடு மடுக்கும் ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் (புறம், 60; 7-8) என்னும் புறச் செய்யுட் பகுதியும் உமணரின் இத்தன்மையை விளக்குகிறது.

அகம் 390ஆம் செய்யுளில் முல்லை நிலம் பற்றிய குறிப்பேதும் இல்லை. உமணர் செல்லும் நாடு இச்செய்யுளில் அதர்படு பூழிய சேட்புலம்’ என்றே உள்ளது. எனினும் இதிலிடம்பெறும் தலைவன் முல்லை நிலத்தவன் எனப் பேராசிரியர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இது விளங்குமாறில்லை. அஃதெவ்வாறாயினும் மேற்காட்டிய பகுதி தலைவியின் குடியியல்பைக் காட்டுவதேயன்றித் தலைவனை அடையாளம் காட்டுவதன்று என்பது உறுதியாகும்.

இவ்விரு செய்யுட்களிலும் இடம்பெறும் தலைமக்கள் இன்ன நிலத்தினர் என உணர்ந்தாலன்றி இச்செய்யுட்கள் திணைக் கலப்புப் பற்றித்தான் பேசுகின்றனவா அல்லவா என்பதனை உறுதிப்படுத்த முடியாது.

இவ்விரு செய்யுட்களிலும் உமணப் பெண் உப்பிற்கு ஈடாக நெல்லைக் குறிப்பிடுகின்றாள். ‘நெல்லும் உப்பும் நேரே ஊரீர் கொள்ளிரோ (அகம், 390. 8-9) நெல்லின் நேரே வெண்கல் உப்பு (அகம் 140:7) இக்குறிப்புக்களின் அடிப்படையில் காண்கையில் உமணப் பெண் மருத நிலத்தில் உப்பு விற்றாள் என்று பேராசிரியர் முனைவர் தமிழண்ணல் அவர்கள் முடிவு செய்கின்றார்கள். இக்குறிப்பு இச்செய்யுட்களில் இடம்பெறும் தலைவன் மருத நிலத்தான் என்பதனைத் தெளிவுபடுத்துகின்றன. எனவே முனைவர் தமிழண்ணல் அவர்களுடைய முடிவு சரியானதேயாகும். எனினும், உமணப் பெண்ணை நெய்தல் திணைக்குரியவளாகக் கருதியமையால் இவர்கள் மருத நிலத் தலைவனுக்கும் நெய்தல் நிலத் தலைவிக்கும் இடையே நடக்கும் திணைக்கலப்புக் காதலாகக் கூறியுள்ளார்கள்.++

சங்க காலத்தில் பரக்கப் பேசப்படும் மாந்தருள் உமணர் என்பார் குறிப்பிடத்தக்கோராவர். பாலைப் பாடல்கள் இவர்களுடைய நெடுஞ்செலவு பற்றியும் பிற இயல்புகள் பற்றியும் விரிவாகப் பேசுகின்றன. எனினும் இவர்கள் இன்ன நிலத்தினர் என்று அடையாளம் காட்டக்கூடிய குறிப்புக்களைப் பெரும்பான்மையான செய்யுட்களில் காண முடியவில்லை.

உமணர் இன்ன திணையினர் என உணர்த்தும் ஒரே சான்று நற்றிணையில் உள்ளது.

தம்நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து
பிறநாட்டு உப்பின் கொள்ளை சாற்றி (நற். 183:1-2)

என்னும் குறிப்பினால், உமணர் நெல் விளையும் மருத நிலத்திற் குரியவரே எனத் துணிய முடிகின்றது. நற்றிணை உரையாசிரியர் பின்னத்தூர் நாராயண சாமி ஐயரும் இதனைத் தெளிவுப்படுத்தியுள்ளார்கள். மருத நில உழவருள் ஒரு சாரார் உப்பு வாணிகத்தில் ஈடுபட்டனர் என்றும், இவர்கள் நாட்டின் பல பகுதிகட்கும் சென்று உப்பை விற்றுப் பொருள் தொகுத்திருக்க வேண்டுமென்றும் சங்க இலக்கியம் தரும் குறிப்புக்கள் காட்டுகின்றன. இவர்கள் உப்பை விளைவித்தோராக அன்றி அதனைப் பெற்றுப் பிறர்க்கு தந்தோராகவே இருந்தனர். சிறுகுடிப்பரதவர் உழாது செய்த உப்பினை விற்றனர் உமணர் எனக் கூறும் அகம் 140ஆம் செய்யுள் உமணரைப் பரதவரிலிருந்து நன்கு வேறுபடுத்திடக் காணலாம்.

மேற்கண்ட விளக்கத்தினால் அம்மூவனாரின் இரு செய்யுட்களும் நிலம் கடந்த காதலர்ளையன்றி, மருதநிலத்தவரான காதலர்களையே காட்டுகின்றன என்று அறிய முடிகிறது. எனவே திணைக் கலப்பு மணம் அற்றைப் புலவர்தம் இலக்கியப் பொருளாக அமையவில்லை என முடிவு செய்தல் தவறாகாது.
——————————————————————————–
+ சாலை இளந்திரையன், சமுதாய நோக்கு, பக்.75, 80
+ தமிழ்க் காதல், பக். 31.
++Tradition and Talent in Cankam Poetry. P. 157

— முனைவர். அ. தட்சிணாமூர்த்தி
தமிழிலக்கிய ஆய்வுக்கோவை – தொகுதி II, 1987,
பதிப்பாசிரியர்கள்: ச. அகத்தியலிங்கம், சோ. ந. கந்தசாமி
தமிழியற் சிந்தனைகள், அகல் பதிப்பகம், சென்னை, 2003, (பக். 37 – 41)

 

தீபாவளியும் கார்த்திகையும் – ஒரு வரலாற்றுப் பார்வை

புதிய பனுவல்: An International Journal of Tamil Studies,
Vol I, Issue 4, November 2009,Pages 41 – 48, அ. தட்சிணாமூர்த்தி

உண்ணும் உணவோடும், அவ்வுணவை உற்பத்தி செய்ய உதவும் மாடுகளோடும் உறவுடைய பொங்கல் இந்நாளில் எவ்வளவு ஆர்வத்தோடு கொண்டாடப்படுகிறது என்பதை விளக்கத் தேவையில்லை. கதிரவன் திசைமாறும் நாளையே பொங்கல் என நாம் கொண்டாடுகிறோம். வடபுலத்தில் சங்கராந்தி என்று கொண்டாடுகிறார்கள். இன்று அது தமிழர் திருநாள் என்ற பெயரோடு தமிழகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இத்தகு திருநாள் பற்றிப் பழைய தமிழ் இலக்கியங்களில் ஒரு குறிப்பும் இல்லை. இன்று புத்தாடைகளோடும், புதுப்புது இனிப்புப் பண்டங்களோடும், வெடிகளோடும், வாண வேடிக்கைகளோடும் தொடர்புடையதாகவும், கோடிக்கணக்கான பணம் புரளுதற்குரிய வணிகத்தை ஊக்குவிப்பதாகவும் கொண்டாடப்படும் தீபாவளியைப்பற்றித் தமிழ்நாட்டில் காணக்கிடைக்கும் முதல் கல்வெட்டு, கி.பி. 1542 இல், அச்சுத தேவராயர் ஆட்சிக் காலத்தில் திருமலையில் பொறிக்கப்பட்டதே என அறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியம் தெரிவிக்கிறார். தீபாவளியன்று பெருமாளுக்கு அதிரசம் நிவேதனமாக அளிக்க ஆணையிடுவதாக இக்கல்வெட்டு அமைந்தது. விசயநகர மன்னர் ஆட்சிக்கு முன்னர், தீபாவளி என்ற பெயரோடு எந்த விழாவும் தமிழ்நாட்டில் கொண்டாடப்படவில்லை. ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடிய அருட்ப்பாடல்களிலும் அதுபற்றிக் குறிப்பில்லை. ஐப்பசியில் ஓண நாள் கொண்டாடப்பட்டதாக, தமிழாகரர் திருஞானசம்பந்தர் தம் திருமயிலைப்பதிகத்தில் குறித்தார். கார்த்திகையில் விளக்கீட்டு விழா நடந்ததையும் குறித்தார். ஆனால் தீபாவளி என்ற பெயரில் ஒரு விழாவையும் குறிக்கவில்லை. ஓணம் என்பது, திருமாலின் பிறந்தநாள். இது ஆவணியில் கொண்டாடும் விழா என்பர். இதனை மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.திருப்பதியில் கிடைக்கும் கல்வெட்டுச் செய்தியைக் கொண்டு, 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தீபாவளி இங்குச் சிறப்பெய்திய நிலையை உணரமுடிகிறது. தீபாவளியை, வடநாட்டவர்க்குரிய பண்டிகையாகவே நாம் கருதி வருகிறோம். சீர்திருத்தக் கொள்கையுடையோர் தீபாவளியைக் கொண்டாடுவதில்லை. நரகாசுரன் திராவிட இனத்தவன் என்பது அவர்கள் கருத்து.

2008 ஆம் ஆண்டு தீபாவளிக்கு முதல் நாள் வெளிவந்த தினமணியில், ‘தமிழ்மணி’ என்ற பகுதியில், ‘அகநானூற்றில் தீபாவளி’ என்று கட்டுரை வெளிவந்தது. அதன் ஆசிரியர் தெ. முருகசாமி என்ற தமிழறிஞர். அகநானூற்றில் 141 ஆம் செய்யுளில் கார்த்திகை விழாவைப்பற்றிய அரிய விளக்கம் அமைந்துள்ளது. அதனைத்தான் அவர் தீபாவளி என்று குறித்தார். தீபம் + ஆவளி தீபாவளியாயிற்று. விளக்கு வரிசை என்பது இதன் பொருள்.கார்த்திகை என்ற பெயர் கூட இல்லாத அகநானூற்றுக் குறிப்பில், மகளிர் முழு நிலவு நாளில் அறுமீன்கள் சேரும் நள்ளிரவில் விளக்குகளைத் தெருவெல்லாம் ஏற்றி, மாலைகளைத் தொங்கவிட்டு விழா நடத்தியதாகக் காணப்படுகிறது. எனவே இது தீபாவளிதானே! இதே நூலில் 17, 185 ஆகிய செய்யுட்களிலும் இவ்விழாவைப்பற்றிய செய்திகள் உள்ளன. நற்றிணையின் 202 ஆம் பாடல், கார்த்திகையை அறம் செய் திங்கள் என்கிறது. இந்த விழாவோடு எந்தத் தெய்வமும் தொடர்புப்படுத்தப்படவில்லை, தின்பண்டங்களோ, புத்தாடைகளோ சுட்டப்படவில்லை. பட்டாசு வெடித்தல் பற்றிய குறிப்பும் இல்லை. முழுக்க முழுக்க வானியல் தொடர்பான ஒரு நிகழ்ச்சியாகவே இது குறிக்கப்பட்டது. பொங்கலும் இத்தகையதே. கதிரவன் திசைமாறுவது தானே பொங்கல் விழாவிற்கு அடிப்படை! தமிழ்ச் செய்யுட்களில் அறுமீன் என்ற குறிப்பு வருவதனால்தான் இப்பண்டிகை கார்த்திகையில் கொண்டாடப்படுவது என்று முடிவுக்கு வருகின்றோம். மேக மூட்டம் இல்லாத, மழை பெய்து அடங்கிய கலப்பைகட்கு வேலையில்லாத பருவமே கார்த்திகை விழாக் கொண்டாடப்பட்ட காலம். ‘கார்த்திகைக்குப் பின் மழையில்லை’ என்பது பழமொழியல்லவா?

இத்தோடு , கார்த்திகை என்ற விண்மீன் (நாள்) பெயரையும், அப்பெயர் உடைய கார்த்திகை என்ற மாதப் பெயரையும்பற்றிச் சிறிது கூறுவோம். தமிழில் மிகத் தொன்மையான நூல் தொல்காப்பியம். தொல்காப்பியச் சான்றோர், எழுத்ததிகாரப் பகுதியில் நாள் பெயரும், மாதப் பெயரும் நிலைமொழியாக இருக்கையில், வருமொழியோடு புணர்கிற நிலையை விளக்குகிறார். இதனை அவர் இகர ஈற்றிலும், ஐகார ஈற்றிலும், மகர ஈற்றிலும் குறிக்கிறார். இன்று வழக்கிலுள்ள 12 மாதங்களின் பெயர்கள் இகரத்திலும் ஐகாரத்திலும் மட்டுமே முடிகின்றன. விண்மீன்கள் இருபத்தேழும் இகர, ஐகார, மகர ஈறுகளில் மட்டுமே முடிகின்றன. இதனால் அறிவதாவது, இன்று வழக்கிலுள்ள மாதப் பெயர்களும், விண்மீன் பெயர்களும் தொல்காப்பியர் காலம் முதல் உள்ளவையென்பதே. இப்பெயர்கள் முதலில் தோன்றிய நாடு எது என்பது ஆயத்தக்கதாகும்.

இனிச் சங்கச்செய்யுட்களில் இம்மாதப் பெயர்கள் இடம் பெறுகின்றனவா என்று கேள்வி எழுகிறது. பன்னிரு திங்கட் பெயர்களும் இடம் பெறவில்லை. தை, மாசி, பங்குனி, ஆடி, என்ற நான்கு மாதப் பெயர்களும் இடம் பெறுகின்றன. ‘தைஇத்திங்கள்’ (நற்.80) என்ற குறிப்பையும், ‘தையூண் இருக்கை’ (நற். 22) என்ற நோன்புப் பெயரையும் காண்க. மாசித் திங்கள்பற்றிப் பதிற்றுப்பத்தில் ஒரு குறிப்புண்டு. (பதிற். 59) அகநானூற்றின் 137 ஆம் செய்யுளில் உறையூரில் காவிரியின் நடுவே அமைந்த அரங்கத்தில் (இன்றையத் திருவரங்கம் தான்) பங்குனி முயக்கம் கொண்டாடப்பட்ட செய்தி இடம்பெறுகிறது. இதனை உத்திர நாள் விழாவெனவே உரையாசிரியர்கள் குறித்துள்ளனர். பங்குனி என்ற பெயர் புறநானுறு 229 ஆம் செய்யுளிலும் உண்டு.

இந்த நான்கு திங்களும் சுட்டப்படுவதனால், அன்று 12 திங்கட் பெயர்களும் வழக்கில் இருந்தன என்ற முடிவேற்படுகிறது. இதனால், கார்த்திகை என்ற நட்சத்திரப் பெயரும், திங்கட் பெயரும், இந்நாளிலும் இத்திங்களில் கொண்டாடப்பட்ட விழாவும் (விளக்கேற்றும் விழா) பழந்தமிழர்க்குச் சிறப்பாக உரியவை என்று முடிவேற்படுகிறது. புறநானூறு 229 ஆம் செய்யுள், கார்த்திகை மீனை, ‘அழல்’ என்று சுட்டுகிறது. சங்க இலக்கியத்தில், வேறு எந்த விழாவுக்கும் சான்றுகள் இல்லை. வெறியாட்டுக்கு அடுத்த சிறப்புப் பெறுவது கார்த்திகை மட்டுமே. இதன் பெயர் ‘விளக்கீடு’ என்பதைத் தமிழாகரர் திருஞானசம்பந்தர் தாம் முதன்முதல் சுட்டுகிறார். இதனால், தீபாவளி என்று வடமொழிப் பெயரும், விளக்கீடு என்ற தமிழ்ப்பெயரும் பொருளால் ஒன்றுபடுவதனைக் காணலாம்.

இனி, இப்பண்டிகைகள் கொண்டாடப்படும் திங்களைப்பற்றி எண்ணுவோம். ஐப்பசி மாதம் அமாவாசையை ஒட்டித் தீபாவளியும், கார்த்திகை மாதம் முழுநிலவை ஒட்டிக் கார்த்திகையும் கொண்டாடப்படுகின்றன. இதனை ஒரு வேற்றுமை என்று கணக்கிடக்கூடும். ஆனால், வடபுலத்தில், தீபாவளி கொண்டாடும் மாதத்தைக் கார்த்திகம் என்றே குறிக்கின்றனர். அஃதாவது, அவர்கட்கு அது கார்த்திகை மாதம் ஆகும். எனவே ஒருவகையில் மாதத்தாலும் இரண்டு விழாக்களும் ஒன்றே எனக் கருத இடமேற்படுகிறது. இந்த ஒற்றுமையினை அறிஞர் அயோத்திதாசப் பண்டிதரே முதலில் காட்டினார் என்று பாரதி வசந்தன் தம் தினமணி தீபாவளிமலர்க் கட்டுரையில் சுட்டிக் காட்டியுள்ளார். வராகமிகிரரின் கணக்குப்படி, தமிழ்மாதம் பிறப்பதற்குப் பதினைந்து அல்லது இருபது நாட்களுக்கு முன்பே சந்திரமான அடிப்படையிலான மாதம் பிறந்துவிடுகிறதாம். இதனால் கார்த்திகம் என்ற பெயரும், கார்த்திகை என்ற பெயரும் ஒன்றுபடக் காண்போம். அயோத்திதாசரும், பாரதிவசந்தனும் சொல்வதிலுள்ள பொருத்தத்தினை, விசயநகர வேந்தர் காலத்தில் இத்தாலி நாட்டிலிருந்து விசயநகரம் வந்த நிக்கலோ டி கோண்டி என்பவரும் டோமிங்கோ பேயசு என்ற இன்னொரு ஆசிரியரும் தரும் தீபாவளி பற்றிய விளக்கத்தாலும் உறுதி செய்யலாம். இதற்கு உறுதுணையாக, பதினென்கீழ்க்கணக்கு நூற்களுள் ஒன்றான கார்நாற்பதில் உள்ள ஒரு சான்றும் அமையக் காணலாம்.

நிக்கலோ டி கோண்டி என்பவர் தீபாவளிப் பண்டிகை நாளை வருடப்பிறப்பு நாள் என்று குறித்தார். டோமிங்கோவும் இதனை ஏற்றார். இவ்வறிஞர், இவ்விழா அக்டோபர் 12இல் நடந்ததாகக் குறிக்கிறார். நரகாசுரன் வரலாற்றோடு தொடர்புப்படுத்தியதையும் இவர் சுட்டுகிறார். ஆண்களும், பெண்களும், வயது வேறுபாடின்றி, ஆறு, குளம், கடல் ஆகியவற்றில் நீராடி, புத்தாடை புனைந்து தொடர்ந்து மூன்று நாட்கள் ஆடியும் பாடியும் களித்தனர் என்கின்றனர். தீபாவளி நாள் அமாவாசையாகும் என்பதனையும் சுட்டிக்காட்டும் பேயசு என்ற அறிஞர், அமாவாசையில் தொடங்கும் ஆண்டு, அமாவாசையிலேயே முடிந்தது என்கிறார். தமிழ்நாட்டில் தீபாவளி அமாவாசையை ஒட்டி ஐப்பசியில் கொண்டாடப்படுகிறது. ஆனால் வடநாட்டவர் கருத்துபடி, கார்த்திகையில் கொண்டாடப்படுகிறது. வடநாட்டவரின் விளக்கீட்டு விழாவும் மூன்று நாள் கொண்டாடப்பட்டது என்பதனைக் கருதவேண்டும். தமிழ் நூல்களுள் கார்த்திகை என்ற பெயரை முதன்முதலாகப் பதினென்கீழ்க்கணக்கு நூல்களான கார்நாற்பதிலும் களவழி நாற்பதிலும் காண்கிறோம். இவற்றில், கார்நாற்பதில் வரும் குறிப்பு மிகச் சிறப்பானது. தீபாவளியும் கார்த்திகையும் ஒன்றே என்று உறுதிசெய்யப் பெரிதும் உதவுவது. இந்த நூலின் ஆசிரியர், காடுகளில், ‘தோன்றி மலர்கள்’ பேரளவில் பூத்துக் குலுங்குவதனை வருணிக்கையில், பின்வருமாறு கூறுகின்றனர். ‘நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கின் தகையுடையவாகிப் புலமெல்லாம் பூத்தன தோன்றி (26). தலைநாளாவது முதல்நாள் அல்லது தொடக்க நாளாகும். கார்த்திகை விழாவின் முதல்நாளில் ஏற்றிவைக்கப்பட்ட விளக்கு என்பதனால், மேலும் சில நாட்கள் அது கொண்டாடப்பட்டது என்பது வெளிப்படையாகும். அது எத்துணை நாள் கொண்டாடப்பட்டது என்று அது வெளிப்படக்கூறாவிட்டாலும், இன்றுள்ள நடைமுறையைப் பார்க்கையில், மூன்றுநாட்கள் கொண்டாடப்பட்டது என்பது விளங்குகிறது. இன்று, மூன்றாம் நாள் கார்த்திகை, ‘குப்பைக் கார்த்திகை’ எனப்படுகிறது. உழவுக்குப் பயன்படும் குப்பை மேடுகளில் விளக்கு ஏற்றுவது வழக்கமாகும். முதல்நாளில் மிகுதியான விளக்குகளை ஏற்றினர். அதனால்தான், தோன்றிமலர் மிகுதிக்கு அது உவமையாயிற்று. களவழிநாற்பது இதனை, ‘கழிவிளக்கு’ என்கிறது. 17. கழி என்னும் உரிச்சொல் மிகுதிப் பொருள் தருவதாகும். அடுத்தடுத்த நாளில் ஒரு சில விளக்குகள் மட்டும் ஏற்றப்பட்டன என்பது குறிப்பு. தீபாவளி ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்படுகிறது. ஆனால் விளக்கீடு இதில் இடம்பெறவில்லை. இது தமிழ் நாட்டில் உள்ள நிலை.

நிக்கலோ டீ கோண்டி தீபாவளியினை மூன்று நாள் விழாவாகக் கூறுவதனை, நம் கார்த்திகைக் கொண்டாட்டத்தோடு ஒப்பிடும்போது இரண்டு விழாவும் ஒன்றே என்ற முடிவுக்கு வருதலைத் தவிர்க்க முடியாது. தமிழ்மரபில், கார்த்திகை சைவத்தோடு (சிவனோடும் முருகனோடும்) தொடர்புடையது. வடபுலத்தில் கார்த்திகை விழா (தீபாவளி) வைணவத்தோடு தொடர்புடையது. தமிழ்நாட்டுக் கார்த்திகையில் எண்ணெய் முழுக்கு, புத்தாடை, இனிப்பு முதலியன இல்லை. வடவர் மரபில் இவை தவிர்க்க முடியாதவை. பாரதி வசந்தன் அவர்கள் கூறுவது போல், இவ்விழாவின் ஆணிவேரை அறிஞர்கள் ஆய்ந்து கண்டறிய வேண்டும். முடிவு, பெரும்பாலும் இது தமிழர்களின் முன்னோர்களிடமிருந்து, உருவான பண்டிகை என்பதாக இருக்க முடியும்.

இனி, மகாராட்டிரத்தில் மகாபலி வாமன அவதாரத்தால் அடக்கப்பட்ட அல்லது முத்தியளிக்கப்பட்ட நாளாகக் கருதி மகாபலியின் உருவங்களை மகளிர் வழிபடுவதாகவும் அதுதான் தீபாவளி என்றும் அறிகிறோம். விஷ்ணுவின் இடத்தில் காளியை வைத்து வழிபடுவதாகவும் கூறுகின்றார். இராமபிரான், இராவணனை அழித்து, சீதாப்பிராட்டியை மீட்டு, அயோத்திக்குத் திரும்பி வந்து முடிசூட்டிக் கொண்ட நாளே தீபாவளி நாள் என்ற கருத்தும் உண்டு.

இங்கு, இன்னொரு நல்ல கருத்தையும் எண்ணிப் பார்க்கலாம். வர்த்தமான மகாவீரர், தம்முடைய பாவாபுரி அரண்மனையில் இரவு முழுவதும் தம் மாணாக்கர்க்கு அறநெறிகளை எடுத்துரைத்தார் என்றும், பொழுது விடிவதற்குச் சற்று முன்பாக, வைகறையில் அவர் முத்திப்பேறு அடைந்தார் என்றும், அது முதலாக, அவரைப் பின்பற்றியோர் அந்நாளை ஞானத்தின் அடையாளமான விளக்குகளை ஏற்றிக் கொண்டாடினர் என்றும், இன்றும், குஜராத்தைச் சார்ந்த மார்வாரிகள் இந்நாளில் தம் புதுக்கணக்கைத் தொடங்குவர் என்றும், அதுவே ஆண்டின் பிறப்பாகக் கொள்ளப்படுகிறது என்றும் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி, ‘சமணமும் தமிழும்’ என்ற நூலில் குறித்துள்ளார்கள். இக்கருத்து, முன்னர்ச்சுட்டிய நிகிலோ டீ கோண்டி, பேயசு ஆகியோரின் கருத்தைத் தழுவியதாகவே தோன்றுகிறது. அயோத்திதாசப் பண்டிதர் தீபாவளிக்கும் பௌத்தத்திற்கும் உள்ள உறவுக்கு ஒரு கதை சொல்லப்படுவதையும் விளக்கியுள்ளார்.

மலாடபுரம் என்ற ஊரிலிருந்த பௌத்தர்கள் ஆமணக்கு விதைகளில் இருந்து எடுத்த நெய்யின் மருத்துவக் குணத்தை அறிந்தும், அது விளக்கு எரிக்கப் பயன்படுவதனை உணர்ந்தும், அதன் பயன்பாட்டைத் தம் மன்னனிடம் சொல்ல,அம்மன்னன் ஆமணக்குச் செடிகளைப் பயிரிடுமாறு மக்களுக்கு அறிவுறுத்தினான் என்றும், அண்ணாந்து என்னும் மலை உச்சியில் குழிதோண்டி, பருத்திநூல் திரிவைத்து எரிய விட்டு, அது உயிர்களுக்குத் தீங்கு செய்யாது என்பதனை ஆராய்ந்து அறிந்து, மக்களைக் கூட்டி, ஆமணக்கு நெய்யை விளக்கெரிக்கப் பயன்படுத்துமாறு கட்டளை இட்டான் என்றும் அம்மக்கள் அதன் தீமை இன்மையை உறுதிசெய்ய விரும்பி, மூன்று நாட்கள் வீட்டுக்கு வெளியில் திண்ணையிலும் தெரு மாடத்திலும் விளக்குவைத்து, பின்னர் வீட்டினுள்ளும் விளக்ககேற்றினர் என்றும் கூறியுள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக, இது ‘கார்த்துல தீபம்’ என்று அழைக்கப்பட்டதையும், கார்த்திகை மாதத்து முழுநிலவு நாளிலே தீபமேற்றி, ஈகை அளித்துப் பகவத்தியானம் செய்தனர் என்றும் குறிப்பிடுகிறார். முழுநிலவோடு தொடர்புடையதாகச் சொல்லுவது, தமிழர் மரபை ஒட்டியுள்ளதைக் காண்க. இந்த வழக்கத்தையும், நற்றிணை 202 ஆம் செய்யுளில் வரும் ‘அறம் செய் திங்கள்’ என்ற தொடரையும் ஒப்பிட்டுக் காணலாம். அறச் செயல்களைத் தான் பௌத்தர்கள் ஈகை என்கின்றனர்.

இவை அனைத்தையும் எண்ணிப் பார்க்கையில், கார்த்திகை என்ற விளக்கீட்டு விழாவை, சைவர், வைணவர், சமணர், பௌத்தர் என்கிற அனைவரும் தமக்கே உரிய வகையில் கொண்டாடி வருவதனை அறியலாம். இவ்வகையில் இது தேசிய விழாவாகும். இருள் தீமைக்கு அறிகுறி; ஒளி நன்மைக்கு அறிகுறி. உலகில் தீமைகள் அடியோடு நீங்கி எல்லோரும் இன்புற்றிருக்க நன்மைகள் பெருகவேண்டும் என்பதனையே இவ்விழா குறிக்கிறது என்று அறியவேண்டும். இப்பொழுது, அகநானூற்றின் 141 ஆம் செய்யுளில் நக்கீரர் சொல்வதனை இந்தக் கருத்தோடு இணைத்துப் பார்க்கலாம்.

‘மதிநிறைந்து அறுமீன் சேரும் அகல் இருள்நடுநாள் மறுகு விளக்குறுத்து மாலை நாற்றிப் பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவு.’

பலருடன் துவன்றி’ என்ற குறிப்பில், ஊர்மக்கள் அனைவரும் கூடி நடத்திய விழா இதுவென்பது விளங்கும். இன்றும் தமிழகத்துச் சிற்றூர்களில் ஊர்ப்பொது விழாவாகவே இது கொண்டாடப்படுகிறது. ஊரின் நடுவிடத்தில் ‘சொக்கக்பனை’ கொளுத்தப்படுகிறது. இதனைச் ‘சுவர்க்கப்பனை’ என்று விளக்கலாம். பனைமடல்களை ஒரு தேர்போலக்கட்டி அமைத்து, நல்ல நேரத்தில் அதற்குத் தீ மூட்டி வழிபடுவர். எஞ்சியுள்ள அம்மடல்களின் பகுதிகளை இல்லத்தில் வைத்துக் காப்பர். திருவண்ணாமலை தீபம் புகழ்மிக்கது. இறைவனை ஒளிவடிவமாக வணங்குதலை இது குறிக்கலாம். மறம் தொலைந்து அறம் வளர்தலையும், துன்பம் நீங்கி இன்பம் பிறத்தலையும், அறியாமை நீங்கி, அறிவு தலைக் காட்டுதலையும் இருளின் நீக்கமாகவும் ஒளியின் தோற்றமாகவும் அடையாளம் காட்டி இந்நாட்டு மக்கள் விழாவெடுத்தனர் என்று அறிகிறோம். பேரறிஞர் அயோத்திதாசப் பண்டிதர் சொல்லும் கதையில் வரும் அண்ணாந்து மலை என்ற பெயர் திருவண்ணாமலையை நினைப்பிக்கிறது. மலை உச்சியில் தீபமேற்றியதாக அவர் குறிப்பிடுவதும் இதனை உறுதிபடுத்துகிறது. எனவே, பௌத்த சமயத்தவரின் பழமரபுக் கதை கார்த்திகை விளக்கீட்டு விழா, தமிழகத்தோடு தொடர்புடையதே என்பதை உறுதிபடுத்த மிகவும் துணைபுரிகின்றது.

பன்னெடுங்காலமாகத் தமிழர் கொண்டாடி வந்த விளக்கீட்டு விழாவோடு, கி.பி. 15 ஆம் நூற்றாண்டளவில் தமிழ்நாட்டில் புகுந்த வடநாட்டு விளக்கீட்டு விழாவையும் சேர்த்துக் கொண்டாடும் நிலை தோன்றியுள்ளது. இரண்டும் வெவ்வேறு விழாக்களாகத் தோன்றினாலும், இரண்டும் ஒன்றே என்ற விளக்கம் நமக்குக் கிடைக்கிறது. இச்சிந்தனையைத் தூண்டிய அறிஞர் அயோத்திதாசரையும், நல்ல நேரத்தில் இதனை நினைவூட்டிய பாரதி வசந்தனையும் பாராட்ட வேண்டும்.

கி. பி. 15 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு இறக்குமதியான ஒரு புதிய பண்டிகை போலத் தோற்றமளிக்கும் தீபாவளி உண்மையில் பழந்தமிழ் மக்கள் கொண்டாடிய விளக்கீட்டிலிருந்து தோன்றியிருக்கலாம் என்ற கருத்து எளிதில் புறக்கணிக்கத் தக்கது அன்று.

குறிப்புகள்:

1. ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதிமயா பும்பாவாய்
– திருமயிலைத் திருப்பதிகம்

2. கார்த்திகைநாள்
தளந்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்
– நாடி பதிகம் – 3

3. கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய ஓண நன்னாள்
– மதுரைக்காஞ்சி 590 – 591

4. இப்பாட்டில், தலைமைகளின் தந்தைக்குரிய காட்டைத் தலைமகன்,
– நுந்தை

அறுமீன் பயந்த அறம்செய் திங்கள்
செல்சுடர் நெடுங்கொடி போலப்
பல்பூங் கோங்கம் அணிந்த காடு’

என்று பாராட்டுகின்றான். காட்டில் எல்லையற்று மலர்ந்துள்ள கோங்கம் பூக்களை கார்த்திகை நாளில் ஏற்றப்பட்டு ஒளி உமிழும் விளக்கு வரிசைக்கு உவமை கூறுவது காணக்தக்கது.

5. தொல்காப்பியம், எழுத்ததிகாரம், உயிர் மயங்கியல் 45, 46.

6. தொல்காப்பியம், எழுத்ததிகாரம், உயிர் மயங்கியல் 84.

7. தொல்காப்பியம், எழுத்ததிகாரம், புள்ளிமயங்கியல் 36.

8. Mahalingam, T.V, Administration and social life under vijayanager part II, University of Madras, Chennai, 1975, p. 78.

9. மு.கு.நூ. ப. 241.

10.அயோத்திதாசர் சிந்தனைகள் மிமி, அலாய்சியஸ், ஞான. (தொகு.) நாட்டர்வழக்காற்றியல் ஆய்வு மையம், தூயசவேரியர் கல்லூரி(தன்னாட்சி), பாளையங்கோட்டை, ப. 47

PDF வடிவில் படிக்க இங்கே சொடுக்கவும் :http://www.indianfolklore.org/journals/index.php/Panu/article/view/719/899