பண்பாட்டுத்தூதன் சாதுவன்

 

முனைவர் அ. தட்சிணாமூர்த்தி
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் குடமுழுக்கு விழா மலர் , 1973
தமிழியற் சிந்தனைகள், அகல் பதிப்பகம், சென்னை, 2003, (பக். 122 – 127)


கோவலன் காவிரிப்பூம்பட்டினத்துப் பெருங்குடிவனிகன். சாதுவனும் அந்நகரத்துப் பெருங்குடிவணிகனே. கோவலன் தந்தை மாசாத்துவன். சாதுவன் என்ற பெயருக்கும் மாசாத்துவன் என்ற பெயருக்கும் இடையே மிகுதியான ஒற்றுமை காணப்படுவதும் காண்க.

இவ்விரு வாணிகரும் மழைவளம் தரும் பத்தினிப்பெண்டிரை மனைவியராகப் பெற்ற பெருமைக்குரியோர். இருவரும் தத்தம் மனைவியைப் பிரிந்து பரத்தைமை மேற்கொண்டோராகவே படைக்கப்பட்டுள்ளனர்.

கோவலன் வடுநீங்கு சிறப்பின் மனையகம் மறந்து விடுதலறியா விருப்புடன் மாதவியோடு வாழ்ந்தான் எனில், சாதுவனும் தகவிலனாகி, அணியிழையாம் ஆதிரையை அகன்று போய், கணிகையொருத்தி கைத்தூண் நல்க அவளோடு வாழ்ந்தான்.

கோவலன் தன் செல்வம் முழுவதையும் இழந்து வறுமையுற்றான். தான் தன் குலம்தரு வான்பொருளை இழந்தமைமையத் தன் மனைவியிடம் சொல்லிக் கழிவிரக்கப்படும் பொழுது,

சலம்புணர் கொள்கைச்சலதியோ டாடிக்
குலந்தரு வான்பொருள் குன்றம் தொலைத்த
இலம்பாடு நாணுத்தரும்

என்றான். சாதுவனும் வட்டினும் சூதினும் வான்பொருள் வழங்கி வறுமையுற்றதாகச் சாத்தனார் கூறுகின்றார்.

இருவருமே தத்தம் கணிகையரிடமிருந்து விலகுகின்றனர். ஆனால் அதில்வேறுபாடுண்டு. கோவலன், வினைவிளை கால மாதலின், ஐயுறக்கூடாத அழகு நங்கையிடமிருந்து தானே விலகுகின்றான். மாதவி,தன் காதலன் தன்னைப் பிரிந்தமைக்குரிய காரணம் அறியாது கையற்றுப் புலம்புகின்றாள். ஆனால் சாதுவனோ தன் கணிகையால் விலக்கப்படுகிறான். ‘பேணிய கணிகையும் பிறர்நலம் காட்டிக் காணம் இலியெனக் கையுதிர்கோடலும் என்றார் சாத்தனார். மாதவி கோவலனைக் காதலித்தவள். ஆனால் சாதுவன் தொடர்புகொண்டகணிகையோ, அவன் பொருளையே காதலித்தாள். ஆம்! அவள் பொருளையே பொருட்படுத்திய பொருட் பெண்டாவாள். கணிகையர் குலத்துப் பண்பு அனைத்தும் கொண்டவளாக இவள் படைக்கப்பட, மாதவியோ கணிகையர் குலத்துப் பிறந்தாலும் கற்புக்கடம்பூண்ட பொற்புடை பெண்ணரசியாகப் படைக்கப் பட்டவள்.

கோவலன் தான் இழந்த செல்வத்தை மீண்டும் ஈட்டவேண்டும் என்று விரும்புகின்றான். சாதுவனும் அவ்வாறே விழைகின்றான். ஆனால், கோவலன் மாதவியை விட்டு நீங்கிவுடனேயே தன் மனைவியை நோக்கி’ஓடுகின்றான். தன் பிழைகளை வெளிப்படக் கூறிவருந்துகின்றான். இழந்த வான்பொருளை ஈட்ட விரும்புவதாகக் கூறுகின்றான். அவளும் சிலம்புள கொண்ம்’ என மூலதனம் வழங்குகின்றாள்.

சாதுவனோ, மனைவியிடம் செல்லவிரும்பவில்லை. தன்பொருளை ஈட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றான். பொருளையீட்டியன்றி மனைவியைக் காண்டல் தனக்கு இழிவு என்று அவன் கருதியிருக்கவேண்டும்.

இருவரும் வேற்றுார் செல்லுகின்றனர். கோவலன் காலிற் சென்றான் எனில் சாதுவன் கலத்திற் சென்றான். கோவலனுக்கு வழித்துணை மனைவியும் மாதவத்தாட்டியான கவுந்தி அடிகளும் ஆவர். சாதுவனுக்கோ பொருளீட்டும்  வேட்கை உடைய வணிகர்கள் வழித்துணை ஆயினர்.

கோவலன் மேற்கொண்ட பயணம் இடையூறு யாதுமின்றி இனிதே நிறைவேறுகின்றது. கவுந்தியடிகளின் அருளால் மாதரி வீட்டில் தங்கியிருந்து அவன் பொருள் முயற்சியில் ஈடுபட வாய்ப்பு ஏற்படுகிறது கோவலனுக்கு. ஆனால் சாதுவன் நிலைவேறானது. நடுக்கடலில் கப்பல் கவிழ்கின்றது; அவன் அலைகடலில் வீழ்ந்து துயர்உறுகின்றான்; அவன் எண்ணியும் பார்க்காத ஒரிடத்தில்- நாகர் நாட்டில் கரையொதுங்கிக் கிடக்கும் அவலநிலையை எய்துகின்றான். கோவலன் தான் மதுரை செல்ல விரும்பி, அவ்வாறே மதுரையை அடைய, சாதுவன் தான் செல்ல விரும்பிய நாடு சேரவழியின்றிச் சேராத இடத்தைச் சேர்ந்தான்.

கோவலன் அடைந்த இடம் பழியொடுபடராப்பஞ்சவன் கோநகர்;தண்ணார் தமிழ் அளிக்கும் பாண்டிய நாட்டின் தலைநகர்; நாகரிக நன்னகர்! ஆனால் சாதுவன் சென்ற இடமோ ஆடையின்றித் திரியும் நாகர்தம் நாடு.

கோவலன் மனிதப் போர்வையில் இருந்த விலங்காம் பொற்கொல்லனைச் சந்தித்து வாழ்வை இழந்தான் என்றால் சாதுவன் விலங்குபோல் இருந்தவர்களிடம் இருந்த மனிதப் பண்பால் வாழ்வு பெற்றான்.

தமிழ் வளர்த்த நாட்டில், தமிழ் மன்னன் ஆட்சியில், கோவலன் தமிழர்களால் கொல்லப்பட்டான். பொற்சொல்லன், காவலர்கள் முன்னிலையில், கோவலன் கள்வன் எனக்குற்றம் சாட்டி நெடும்பேச்சுப் பேசினான். ஆனால், அவனை மறுத்து ஒரு சொல்லும் சொல்லாது, கோவலன் ஊமையாய் நின்றான். அவன் வாய்திறந்து பேசியிருந்தால் ஒரு வேளை உயிர் பிழைத்திருப்பான். தன்னைச் சூழ்ந்து நின்று சாரணர் பேசியதைக்கேட்ட சாதுவன், பேசாதிருந்திருப்பின் மாண்டிருப்பான். கோவலனை அவன் தமிழ் அறிவு காப்பாற்றவில்லை. சாதுவனை அவன் பெற்ற நாகர் மொழியறிவு காப்பாற்றிற்று. நாகரிகமற்ற நாகர்மொழியையும் சாதுவன் கற்ற வனாகப் படைக்கப்பட்டிருத்தல்  குறிப்பிடத்தக்கது.

பழியொடு படராப்பஞ்சவன், மன்னர்க்கு மன்னன் மதிக்குடை வாழ்வேந்தன் தென்னவன், பொற்கொல்லன் சொல்கேட்டுப் புரையற்ற கோவலனைக் காணாமலேயே குற்ற வாளியெனக் கொண்டு கொல்வித்துப் பழிகொண்டான். ஆனால், நாகரிக மற்றவனாகக் கருதப்படும் சாரணத்தலைவன் எண்குதன்பிணவோடு இருந்தது போலத்தன் மனைவியுடன் கள்ளடு குழிகியும் கழி முடை நாற்றமும், வெள்ளென்பு உணங்கலும் விரவிய இருக்கையில் இருந்து அயலவனான சாதுவனை விருந்தினனாக ஏற்றான்; ‘நம்பிக்கு இளையன்ஒர்நங்கையைக் கொடுத்து வெங்கள்ளும் ஊனும் வேண்டுவகொடும்,’ என்றுதன் பணியாளர்க்குக் கட்டளையிட்டான்.

கோவலன் தான்கொண்டு சென்ற செல்வத்தையும் இழந்து உயிரையும் இழந்தான். ஆனால் சாதுவனோ வெறுங்கையோடு சாரணர் உலகம் புகுந்தான். ஆனால் திரும்புகையில் பெருஞ் செல்வத்திற்கு உரியனாக உருமாறினான். ‘பண்டும் பண்டும் கலம் கவிழ்மாக்களை உண்டேம் அவர்தம் உறுபொருள் ஈங்கிவை என்று பெரும் செல்வக் குவியலை அவனுக்குப் பரிசாக அளித்தான் நாகர் தலைவன்!

கோவலன் அடியெடுத்து வைத்த கோநகர் மதுரை தீக்கு இரையாயிற்று மன்னன்தன் மனைவியுடள் மாண்டான்! ஆனால் சாதுவன் புகுந்த நாகர்நாடு புத்தஞாயிற்றின் ஒளிபெற்றுப்புதுவாழ்வு பெற்றது! பெண்டிரும் உண்டியுமே வாழ்வின் பயன் என்று வாழ்ந்த நாகர்கள், புலால் உண்டியின் புன்மையை அறிந்தனர்; மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும் சான்றோரால் கடியப்பட்டவை என்பதனை முதல் முறையாக அறிந்தனர். இறந்தவர் பிறத்தலும் பிறந்தவர் இறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றவை என்று அறிந்தனர். நல்லறம் செய்தவர் நல்லுலகும் அல்லறம் செய்தோர்.அரு நரகத்தையும் அடைவர் என்று உணர்ந்தனர்.

தன் கணவனைக்கள்வன் எனக்குற்றம் சுமத்திக்கொன்ற நகரத்தைத் தீக்கு இரையாக்க விரும்பிய கண்ணகி தீக்கடவுட்குக்கட்டளையிட்ட போது, அக்கடவுள் அவள் கட்டளையை உடனே நிறைவேற்றிற்று. காவலன் பேரூரில் கனையெரி மண்டிற்று ஆதிரை தீக்குளித்து உயிர்விட விரும்பினாள். சுடலைக் கானில் தீமூட்டப்பட்டது. ஆதிரை அதன்மீது அமர்ந்தாள். ஆனால் தீ அவளைச்சுட மறுத்தது. ‘தீயும் சொல்லாத் தீவினையாட்டியேன் யாது செய்வேன்?’ என வாய்விட்டுப் புலம்பினாள். ஆம்! கண்ணகியின் கட்டளை நிறை வேற்றப்பட்டது. ஆதிரையின் வேண்டுதல் புறக்கணிக்கப்பட்டது.

சிலப்பதிகாரத்தில் கண்ணகியும் கோவலனும் மீண்டும் ஒன்று சேர்கின்றனர். கோவலன் தெய்வ வடிவில் கண்ணகியைக் கூடுகின்றான். ஆனால் சாத்தனார் சாதுவனையும் ஆதிரையையும் மனித வடிவிலேயே மீண்டும் இணைய வைக்கின்றார்.

சாத்தனார் சிலப்பதிகாரக் கதை நிகழ்வுகளை உருமாற்றித் தம் காப்பியத்தின் ஒரு காதையாக அமைத்துத் தம் நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளார் என்று சொல்வது தவறாகாது. சிலப்பதிகாரத்தைச் சமணக் காப்பியம் என்று சொல்வார் உளர். ஆனால் இதனை மறுப்பாரும் உண்டு. இளங்கோவடிகட்குச் சமயப் பொறையிருந்தது. சமண சமயவுண்மைகள் கவுந்தியடிகள் சாரணர் ஆகியோர்வாயிலாகச்சொல்லப்பட்டுள்ளன. ஆய்ச்சியர் குரவையில் திருமால் வழிபாடு நன்கு விளக்கப்பட்டுள்ளது. வேட்டுவ வரியிலும் குன்றக் குரவையிலும் கொற்றவை வழிபாடும் முருக வழிபாடும் பேசப்படுகின்றன. குறிப்பிட்ட சமயத் தத்துவங்களைப் பரப்பும் நோக்கம் இளங்கோவடிகட்கு இருந்ததாகச் சொல்ல முடியாது. ஆனால், சாத்தனார் புத்த சமயத்தைப் பரப்பும் நோக்குடனேயே காப்பியம் இயற்றினார். ஆதிரை பிச்சையிட்ட காதையில் இந்நோக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளதன்மையைச்சுருக்கமாகக் கூறி இக்கட்டுரை நிறைவுறுகின்றது.

கொல்லாமையறமும் புலால் மறுத்தல் அறமும் சமணர்க்கும் பெளத்தர்க்கும் பொதுவானவை. ஆனால் புலால் உண்ணுவது பற்றிக் காலப்போக்கில் பெளத்தர்கள் சற்று நெகிழ்ச்சியான போக்கைக் கடைப்பிடித்தனர் என்று தெரிகின்றது. நாகர் குருமகன் வெங்கள்ளும் ஊனும் வேண்டிய அளவு கொடுக்குமாறு கட்டளையிட்ட பொழுது சாதுவன் வெவ்வுரை கேட்டேன் வேண்டேன்’ என்றான். ஆனால் நாகர்தலைவன் ‘கள்ளும் ஊனும் கைவிடின் இவ்வுடம்பு உள்ளுறை வாழுயிர் ஒம்புதல் ஆற்றேன், தமக்கொழி மரபின் சாவுறுகாறும் எனக்கா நல்லறம் எடுத்துரை என்று அவன் அடி வீழ்ந்து வேண்டியபோது சாதுவன்,

நன்று சொன்னாய் நன்னெறிப்படர்குவை
உன்றனக்கு ஒல்லும் நெறியறம் உரைக்கேன்
உடைகல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்குறின்
அடுதொழில் ஒழிந்து அவர் ஆருயிர் ஓம்பி
மூத்து விளி மாஒழித்து எவ்வுயிர் மாட்டும்
தீத்திறம் ஒழிக’

என்று அறிவுறுத்தினான். இதனால், முதுமையால் இறந்த விலங்கின் இறைச்சியை உண்ணத்தடையில்லை என்பது விளங்கும்.

புத்தபகவானுடைய மொழிக்கொள்கையும் சாதுவன் வரலாற்றால் வற்புறுத்தப்படுவதாகத் தோன்றுகின்றது. வடமொழியில் சமயத் தத்துவங்களை எழுதிவைக்கும் மரபு வேதநெறியாளர் பின்பற்றி யதாகும். புத்தபகவான் இதற்கு மாறாக, மக்கள் மொழியிலேயே கருத்துக்களைச் சொல்ல வேண்டும் என்று விரும்பினார். பாலிமொழியே பெளத்தர்களால் கையாளப்பட்டது என்பது எண்ணத்தக்கது. கிறித்துவ சமயத்தொண்டர்கள் தாம் சென்ற பகுதியின் மொழிகளைக் கற்றுச் சமயப்பணி புரிந்தமையோடு புத்தபகவான் கொள்கையை ஒப்பிட்டுக் காணலாம்.

நாகரிகமில்லாத சாரணர்களின் மொழியைக் கூட ஒருவன் கற்பது தேவையானது என்பது சாத்தானார் கோட்பாடாகத் தெரிகின்றது. வணிகமரபினர்க்கு இது அடிப்படையான தேவையன்றோ! நானா தேசியத்திசையாயிரத்து ஐந்நூற்றுவர் என்னும் வணிகர்குழுவொன்று இடைக்காலத்தில் இருந்தமை கல்வெட்டுக்களால் அறியப்படு கின்றது. இத்தகு வணிகக் குழுக்களால்தான், இந்தியப் பண்பாடு கீழ்த்திசை நாடுகளில் பரவிற்று என்பது வரலாற்றறிஞர்துணிபாகும். தமிழகத்திலிருந்தே மகாயான புத்த சமயம் வெளியுலகுக்குச் சென்றது என்பர். காஞ்சிபுரம் புத்த சமயத் தலைமையிடமாக இருந்தது என்பதனை நினைவுகூர்க. சாதுவன் வரலாறு, புத்த சமயம் வணிகர்களால் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட வரலாற்றைக் காட்டுவதாகக் கொள்ளலாம்.

வணிகர்கள் சமணசமயத்தையும் பெளத்த சமயத்தையும் பெரிதும் பின்பற்றினர் என்றும், அவர்கள் மேம்பாடு பெற்ற காலப் பகுதியிலேயே தமிழில் காப்பியங்கள் பெருகின என்னும் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர். இன்று தமிழிலுள்ள பெருங்காப்பியங்களும் சிறுகாப்பியங்களும் இவ்விரு சமயங்களையும் சார்ந்தவர்களாலேயே இயற்றப்பட்டன என்பது எண்ணத்தக்கது. சாதுவன் என்ற பாத்திரம் வணிகர்கள் பண்பாட்டுத்தூதர்களாய்ச் செயற்பட்டமையை நமக்கு நினைவூட்டு கிறது என்று கொள்வது தவறாகாது!

சங்க இலக்கியங்களும் திணைக் கலப்பு மணமும்

சங்க காலத்தில் இயற்றப்பட்ட அகத்திணைச் செய்யுட்கள் அக்காலத் தமிழ் மக்களின் ஆண் பெண் உறவு பற்றிய கோட்பாடுகளைத் தெளிவுறக் காட்டுகின்றன. முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து திணைகளிலும் அவ்வத் திணையின் இயற்கையை ஒட்டி ஐந்து வகையான வாழ்க்கை முறைகள் உருவாகியிருந்தன என்பதனைத் திணைச் செய்யுட்கள் உணர்த்துகின்றன. இவர்கள் தனித்தனிப் பண்பாடுகளைப் போற்றினாலும் தமக்குள் பொருளாதார உறவு கொண்டிருந்தனர் என்று அறியச் சான்றுகள் உள்ளன. இப்பொருளாதார உறவு பண்டமாற்றின் வழியே வளர்ந்ததாகும். இதற்குமேல், இப்பல்வகைப் பிரிவினரிடையே மணவுறவு நிலவிற்றா என்பது ஒரு வினாவாகும். சாதியமைப்பு இறுக்கமான காலங்களிலும் கலப்பு மணங்கள் நடந்தே உள்ளன. எனவே பண்டும் அத்தகு இலக்கியப் படைப்பாளர்கள் பண்டைக் காலத்தில் இப்புறனடை நிகழ்ச்சியை இலக்கியப் பொருளாகக் கொண்டதாகத் தெரியவில்லை. அற்றைச் சமூகத்தில் எத்தகைய மரபுகள் பின்பற்றப்பட்டனவோ அவற்றை மனத்திற்கொண்டு அக்கால இலக்கிய மரபுகளோடு இணைத்துச் செய்யுள் செய்தனர். ஒரு திணை மாந்தர் தமக்குள்ளேயே கொண்டும் கொடுத்தும் வாழ்ந்த நிலையினைக் கண்டனர்; ஒரு திணைக்குள்ளேயே வயது வந்த ஆணும் பெண்ணும் கண்டு காமமுற்று மணக்கும் நிலையினையே அகத்திணைக்குப் பொருளாக்கினர். எனினும், சங்கப் பாடல்களை ஆய்ந்த இக்காலச் சான்றோர் சிலர் அன்று திணைக்கலப்பு மணத்திற்கும் இடமிருந்தது என்று கருதுகின்றனர். இக்கருத்தின் வன்மை மென்மைகளை ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சங்க இலக்கியங்களும் திணை கலப்பு மணமும்

வெவ்வேறு நிலப்பகுதிகளின் வாழ்க்கைமுறைகளும் கணிசமான அளவில் வேறுபட்டிருந்தன. கருப்பொருள் பற்றிய தொல்காப்பியச் சூத்திரம் இதனைத் தெளிவாகவே உணர்த்துகின்றது. முல்லை, குறிஞ்சி முதலான திணைகளைத் தனித்தனி உலகமாகவே காட்டுவார் தொல்காப்பியர். இப்பண்பாட்டு வேறுபாடு நிலம் விட்டு நிலம் நடைபெறும் கலப்பு மணங்களை ஊக்கவில்லை என்றே தோன்றுகிறது. ஒரு திணையாரிடையே நடந்த காதல் மணமும்கூடப் பல்வேறு தடைகளை நீக்கி வெற்றிபெற வேண்டிய நிலைமை அன்றிருந்தது. ஊரலர், உடன்போக்கு, அன்னையின் சினம், தமர் தேடிச் செல்லல், மடலேற்றம் பற்றிய பேச்சு ஆகியவை காதலர்க்கு இருந்த இடையூறுகளையே காட்டுகின்றன.

திணைக்கலப்பு மணமும் சங்க இலக்கியத்தில் பாடப்பட்டுள்ளது என்பதற்கு அம்மூவனாரின் இரு செய்யுட்கள் சான்றாகக் கொள்ளப்படுகின்றன. (அகம். 140,390) இவை இரண்டும் தலைவன் கூற்றுகளாக அமைந்தனவாகும். இவற்றில் இடம்பெறும் தலைவி அன்று உப்பு வாணிகத்திலீடுபட்டிருந்த உமணர் என்னும் குடியாரின் மகளாவாள். உப்பை விலை கூறி விற்கும்பொழுது அவளைக் கண்டு காதலுற்ற காளையின் கூற்றாக இச்செய்யுட்கள் அமைகின்றன.

பேராசிரியர் முனைவர் வ.சுப. மாணிக்கனார் அவர்கள் இவ்விரு செய்யுட்களையும் திணைக்கலப்பு மணம் பற்றியனவாகக் கருதியுள்ளார்கள். அகம். 140ஆம் செய்யுள் குறிஞ்சித் திணை சார்ந்த தலைவனுக்கும் நெய்தற் குமரிக்கும் இடையே தோன்றிய காதலையும், அகம்.390 ஆம் செய்யுள் முல்லைத் தலைவனுக்கும் நெய்தற் குமரிக்கும் இடையே தோன்றிய காதலையும் விளக்கும் எனத் தம் தமிழ்க் காதலில் விளக்கியுள்ளார்கள்.+

இவ்விரு செய்யுட்களிலும் உமணர் பற்றிய செய்திகள் உள்ளன.
அவை வருமாறு:

பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
இருங்கழிச் செறுவின் உழாஅது செய்த —
வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி
என்றுழ் விடர குன்றம் போகும்
கதழ்கோல் உமணர் காதல் மடமகள் (அகம் 140.1-5)

உவர்விளை உப்பின் கொள்ளை சாற்றி
அதர்படு பூழிய சேட்புலம் படரும்
ததர்கோல் உமணர் (அகம், 3901-3)

உமணர் என்னும் இனத்தவர் கடற்கரையில் விளையும் உப்பினை உள்நாட்டில் நெடுந்தொலைவு எடுத்துச் சென்று விற்கும் இயல்பினர் என்பதே உமணர் பற்றி நாம் உணரும் செய்தியாகும்; உமணர் கடற்கரை வாழ்வினர் என்று இச்செய்யுட்கள் கூறவில்லை. நாடெல்லாம் சுற்றி வணிகம் செய்யும் இயல்பினர் உமணர் என்றும், அத்தகையோரின் மகள் தலைவியென்றுமே தலைவன் குறிப்பிடு கின்றான். என்றுாழ் விடர குன்றம் போகும் என்னும் பகுதியைக் கொண்டு தலைவன் தலைவியைச் சந்தித்த இடம் குறிஞ்சி நிலம் என்று முடிவு செய்து இச்செய்யுள் குறிஞ்சித் தலைவனுக்கும் நெய்தற் குமரிக்கும் நடக்கும் காதலைக் காட்டுகிறது என்று பேராசிரியர் மாணிக்கனார் அவர்கள் கூறியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், உமணர் என்பார் கடற்கரை உப்பை மலை நாடு வரைக்கும் எடுத்துச் சென்று விற்போர் என்பதே செய்யுளில் காணப்படும் செய்தியாகும். ‘கழியுப்பு முகந்து கன்னாடு மடுக்கும் ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் (புறம், 60; 7-8) என்னும் புறச் செய்யுட் பகுதியும் உமணரின் இத்தன்மையை விளக்குகிறது.

அகம் 390ஆம் செய்யுளில் முல்லை நிலம் பற்றிய குறிப்பேதும் இல்லை. உமணர் செல்லும் நாடு இச்செய்யுளில் அதர்படு பூழிய சேட்புலம்’ என்றே உள்ளது. எனினும் இதிலிடம்பெறும் தலைவன் முல்லை நிலத்தவன் எனப் பேராசிரியர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இது விளங்குமாறில்லை. அஃதெவ்வாறாயினும் மேற்காட்டிய பகுதி தலைவியின் குடியியல்பைக் காட்டுவதேயன்றித் தலைவனை அடையாளம் காட்டுவதன்று என்பது உறுதியாகும்.

இவ்விரு செய்யுட்களிலும் இடம்பெறும் தலைமக்கள் இன்ன நிலத்தினர் என உணர்ந்தாலன்றி இச்செய்யுட்கள் திணைக் கலப்புப் பற்றித்தான் பேசுகின்றனவா அல்லவா என்பதனை உறுதிப்படுத்த முடியாது.

இவ்விரு செய்யுட்களிலும் உமணப் பெண் உப்பிற்கு ஈடாக நெல்லைக் குறிப்பிடுகின்றாள். ‘நெல்லும் உப்பும் நேரே ஊரீர் கொள்ளிரோ (அகம், 390. 8-9) நெல்லின் நேரே வெண்கல் உப்பு (அகம் 140:7) இக்குறிப்புக்களின் அடிப்படையில் காண்கையில் உமணப் பெண் மருத நிலத்தில் உப்பு விற்றாள் என்று பேராசிரியர் முனைவர் தமிழண்ணல் அவர்கள் முடிவு செய்கின்றார்கள். இக்குறிப்பு இச்செய்யுட்களில் இடம்பெறும் தலைவன் மருத நிலத்தான் என்பதனைத் தெளிவுபடுத்துகின்றன. எனவே முனைவர் தமிழண்ணல் அவர்களுடைய முடிவு சரியானதேயாகும். எனினும், உமணப் பெண்ணை நெய்தல் திணைக்குரியவளாகக் கருதியமையால் இவர்கள் மருத நிலத் தலைவனுக்கும் நெய்தல் நிலத் தலைவிக்கும் இடையே நடக்கும் திணைக்கலப்புக் காதலாகக் கூறியுள்ளார்கள்.++

சங்க காலத்தில் பரக்கப் பேசப்படும் மாந்தருள் உமணர் என்பார் குறிப்பிடத்தக்கோராவர். பாலைப் பாடல்கள் இவர்களுடைய நெடுஞ்செலவு பற்றியும் பிற இயல்புகள் பற்றியும் விரிவாகப் பேசுகின்றன. எனினும் இவர்கள் இன்ன நிலத்தினர் என்று அடையாளம் காட்டக்கூடிய குறிப்புக்களைப் பெரும்பான்மையான செய்யுட்களில் காண முடியவில்லை.

உமணர் இன்ன திணையினர் என உணர்த்தும் ஒரே சான்று நற்றிணையில் உள்ளது.

தம்நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து
பிறநாட்டு உப்பின் கொள்ளை சாற்றி (நற். 183:1-2)

என்னும் குறிப்பினால், உமணர் நெல் விளையும் மருத நிலத்திற் குரியவரே எனத் துணிய முடிகின்றது. நற்றிணை உரையாசிரியர் பின்னத்தூர் நாராயண சாமி ஐயரும் இதனைத் தெளிவுப்படுத்தியுள்ளார்கள். மருத நில உழவருள் ஒரு சாரார் உப்பு வாணிகத்தில் ஈடுபட்டனர் என்றும், இவர்கள் நாட்டின் பல பகுதிகட்கும் சென்று உப்பை விற்றுப் பொருள் தொகுத்திருக்க வேண்டுமென்றும் சங்க இலக்கியம் தரும் குறிப்புக்கள் காட்டுகின்றன. இவர்கள் உப்பை விளைவித்தோராக அன்றி அதனைப் பெற்றுப் பிறர்க்கு தந்தோராகவே இருந்தனர். சிறுகுடிப்பரதவர் உழாது செய்த உப்பினை விற்றனர் உமணர் எனக் கூறும் அகம் 140ஆம் செய்யுள் உமணரைப் பரதவரிலிருந்து நன்கு வேறுபடுத்திடக் காணலாம்.

மேற்கண்ட விளக்கத்தினால் அம்மூவனாரின் இரு செய்யுட்களும் நிலம் கடந்த காதலர்ளையன்றி, மருதநிலத்தவரான காதலர்களையே காட்டுகின்றன என்று அறிய முடிகிறது. எனவே திணைக் கலப்பு மணம் அற்றைப் புலவர்தம் இலக்கியப் பொருளாக அமையவில்லை என முடிவு செய்தல் தவறாகாது.
——————————————————————————–
+ சாலை இளந்திரையன், சமுதாய நோக்கு, பக்.75, 80
+ தமிழ்க் காதல், பக். 31.
++Tradition and Talent in Cankam Poetry. P. 157

— முனைவர். அ. தட்சிணாமூர்த்தி
தமிழிலக்கிய ஆய்வுக்கோவை – தொகுதி II, 1987,
பதிப்பாசிரியர்கள்: ச. அகத்தியலிங்கம், சோ. ந. கந்தசாமி
தமிழியற் சிந்தனைகள், அகல் பதிப்பகம், சென்னை, 2003, (பக். 37 – 41)